'தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவரை, இப்படி முடக்கி விட்டனரே...' என, ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் பற்றி கவலைப்படுகின்றனர், அவரது கட்சி தொண்டர்கள். ஒடிசாவில், 24 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர் நவீன் பட்நாயக். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கு முன் வரை, நவீன் பட்நாயக்கிற்கு, ஒடிசா அரசியலில் எதிரிகளே இல்லை என்ற நிலை இருந்தது. நாட்டிலேயே, மிகவும் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை, வட கிழக்கு மாநிலமான, சிக்கிமின் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கிற்கு உண்டு. இவர், 24 ஆண்டுகள், 165 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார்.இவருக்கு அடுத்தபடியாக, நவீன் பட்நாயக், 24 ஆண்டுகள், 85 நாட்களாக பதவி வகித்து உள்ளார். இன்னும், 80 நாட்கள் முதல்வராக நீடித்திருந்தால், சாம்லிங்கின் சாதனை, நவீன் பட்நாயக் வசம் வந்து இருக்கும். இதற்காக, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தீவிரமாக பிரசாரம் செய்தார்.ஆனால், இதுவரை இல்லாத வகையில், எதிர்பாராத விதமாக, பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்து, பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது. 'நீண்ட கால முதல்வர் என்ற சாதனை படைக்கலாம் என நினைத்தால், ஒடிசா மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்து, சோதனையை அளித்து விட்டனரே...' என கண்ணீர் வடிக்கிறார், நவீன் பட்நாயக்.