(ஆந்திர மாநில காங்., தலைவர் ஷர்மிளா கார்ட்டூன்)'அரசியல்வாதிகள், தங்கள் வாரிசுகளையும் அரசியல் களத்தில் இறக்கி விடுவதற்கு இதுதான் காரணம் போலிருக்கிறது...' என, முணுமுணுக்கின்றனர், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள். தெலுங்கானா தனி மாநிலம், 2014ல் தான் உருவானது. அதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தது. இதன் முதல்வராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. இவர், 15 ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தனி கட்சி துவங்கி, ஆந்திராவின் முதல்வராகவும் பதவி வகித்தார். தற்போது, ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இதையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து, சமீபத்தில் தன் தந்தையின், 75வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ராஜசேகர ரெட்டியின் புகைப்பட கண்காட்சியையும் நடத்தினார், ஷர்மிளா. இதைப் பார்த்த ஜெகன்மோகன் ரெட்டியும், தன் பங்கிற்கு, அன்னதானம், ரத்ததானம், உதவித்தொகை என அமர்க்களப்படுத்தினார்.'அரசியல்வாதிகள், தங்கள் மறைவுக்கு பின்னும், தங்களை பற்றி பொதுமக்கள் பேச வேண்டும் என்பதற்காகத் தான், வாரிசுகளை அரசியலுக்குள் இழுத்து விடுகின்றனர். இதற்கு மன்னராட்சியே பரவாயில்லை...' என புலம்புகின்றனர், ஆந்திர மக்கள்.