| ADDED : ஏப் 04, 2024 09:34 PM
'இப்போது தான் ஆந்திர அரசியல் களம் சூடு பிடித்துள்ளது...' என, எதிர்பார்ப்புடன் கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஜெகன், முன்னாள் முதல்வரான, மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன். கடப்பா பகுதியில் ராஜசேகர ரெட்டி குடும்பத்துக்கு செல்வாக்கு உள்ளது. ராஜசேகர ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இந்த தொகுதியின் எம்.பி.,க்களாக பதவி வகித்துள்ளனர். ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரர் விவேகானந்த ரெட்டியும் இங்கு எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார். 2019ல் விவேகானந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜெகன் மோகனின் நெருங்கிய உறவினரும், தற்போதைய கடப்பா எம்.பி.,யுமான அவினாஷ் ரெட்டி தான், இந்த கொலைக்கான சதித் திட்டத்தை தீட்டியவர் என, விவேகானந்த ரெட்டியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில், அவினாஷ் ரெட்டிக்கு ஆதரவாக ஜெகன்மோகன் செயல்படுகிறார். விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் அவினாஷ் ரெட்டியே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்., சார்பில், அந்த கட்சியின் மாநில தலைவரும், முதல்வர் ஜெகனின் தங்கையுமான ஷர்மிளா களத்தில் நிற்கிறார். ஷர்மிளாவும், அவினாஷ் ரெட்டியும் சகோதர உறவு முறை உடையவர்கள். இதனால், 'கடப்பா தேர்தல் களத்தில் அண்ணன் - தங்கைக்கு இடையே அனல் பறக்கிறது. சபாஷ், சரியான போட்டி தான்...' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.