'பதவியில் இல்லை என்பதற்காக, எப்படியெல்லாம் அவமானப்படுத்துகின்றனர் பார்த்தீர்களா...?' என குமுறுகிறார், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ். தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்று, 1,000 நாட்கள் ஆன நிலையில், அதை பிரமாண்டமாக கொண்டாடினர். அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான சந்திரசேகர ராவ், 'இந்த 1,000 நாட்களில், காங்கிரஸ் அரசு உருப்படியாக எதையுமே செய்யவில்லை...' என அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த ரேவந்த் ரெட்டி, 'தெலுங்கானா சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரசேகர ராவ், இந்த 1,000 நாட்களாக, அவரது பண்ணை வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்; சட்டசபைக்கு வருவதே இல்லை. ஆனால், 1,000 நாட்களுக்கும், 1.24 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். 'இது தவிர, அவரது பாதுகாப்புக்காக, அரசு சார்பில் குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்புக்காக மட்டும், 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் பணியாற்றாதவர், எதற்கு தண்டச் சம்பளம் வாங்குகிறார்...?' என, ஆவேசமாக கேள்வி எழுப்பினார். சந்திரசேகர ராவோ, 'ரேவந்த் ரெட்டியின் தலைவரான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சம்பளம் வாங்குகிறாரா இல்லையா; இதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா...?' என, காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.