உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / இனி தலைகாட்ட முடியுமா?

இனி தலைகாட்ட முடியுமா?

'எந்த மாநிலத்தில், எந்த கட்சியின் ஆட்சி நடக்கிறது என்று கூட தெரியாமல், எப்படி அரசியலில் இருக்கிறார் என்று தெரியவில்லை...' என, கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான கிருஷ்ண பைரே கவுடா பற்றி கவலையுடன் கூறுகிறார், அந்த கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால். கேரளாவைச் சேர்ந்தவர், கே.சி.வேணுகோபால். இங்குள்ள ஆலப்புழா லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருக்கிறார். இவர், தன் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கர்நாடக காங்., அரசின் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. இது தெரியாமல், கிருஷ்ண பைரே கவுடா, கேரளாவில் சிறப்பான நிர்வாகமும், ஆட்சியும் நடப்பதாக கூறி, பாராட்டி பேசினார். 'கேரளாவில் ஆட்சி நிர்வாகம் நன்றாக நடக்கிறது. அதனால் தான், கல்வியில் இந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது...' என்றார். கிருஷ்ண பைரே கவுடா பேசுவதை தடுக்க முடியாமல், மேடையில் அமர்ந்திருந்த வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். 'இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்ததற்கு நல்ல பரிசு தந்து விட்டார்... இனி, கேரளாவில் நான் தலைகாட்ட முடியுமா...?' என புலம்புகிறார், கே.சி.வேணுகோபால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ