வெற்றுக் கூச்சல்!
'பா.ஜ.,வையும், காங்கிரசையும் தவிர, நாட்டில் வேறு கட்சிகளே இருக்கக் கூடாதா...' என, கோபத்தில் கொந்தளிக்கிறார், டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லுாதியானா மேற்கு சட்டசபை தொகுதிக்கு, வரும், 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதை மூன்று கட்சிகளுமே கவுரவ பிரச்னையாக கருதுவதால், தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் பிரசாரத்தில் பேசுகையில், 'லுாதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி உறுதியாகி விட்டது. இதை தடுப்பதற்காக காங்கிரஸ், பா.ஜ., கட்சியினர் ஒன்று சேர்ந்துள்ளனர். 'காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை; ஆம் ஆத்மி ஜெயிக்கக் கூடாது என, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். காங்கிரஸ் தலைவர்களோ, நாம் தோற்றாலும் பரவாயில்லை; ஆம் ஆத்மி வெற்றி பெறக்கூடாது என பிரசாரம் செய்கின்றனர். பெரும் பணபலம் உள்ள இந்த இரண்டு கட்சிகளும், ஆம் ஆத்மியை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளன...' என, ஆவேசமாக பேசினார். பா.ஜ.,வினரோ, 'தொடர்ந்து, 10 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியால், கடந்த பிப்ரவரியில் நடந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் பஞ்சாப் அரசியலில் எதற்கு வெற்றுக்கூச்சல் போடுகிறார், கெஜ்ரிவால்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.