உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / காலியாகும் கூடாரம்!

காலியாகும் கூடாரம்!

'தேர்தல் அறிவிப்பதற்குள் இந்த கூத்து என்றால், இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ...' என கவலைப்படுகிறார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைந்து போட்டியிட ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டார். ஆனால், தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.,வுடன் பேச்சு நடத்தினார். இதனால் தனித்து போட்டியிடுவது என்றமுடிவுக்கு வந்துள்ளார், ஜெகன். இந்நிலையில், சமீபத்தில் தன் கட்சியின் எம்.பி.,க்களை அழைத்து, அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சரியாக செயல்படாத எம்.பி.,க்களுக்கு இந்த முறை, 'சீட்' இல்லை. ஓரளவு சிறப்பாக செயல்பட்ட எம்.பி.,க்கள், வேறு தொகுதிகளுக்கு மாற்றப்படுவர்...' என, கறாராக உத்தரவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த எம்.பி.,க்கள் சிலர், 'மாநிலம் முழுதும் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசுகிறது; கூட்டணியும் அமையவில்லை. இந்த லட்சணத்தில் சீட் தர மாட்டாராம்...' என, முணுமுணுத்தனர். மேலும் சில எம்.பி.,க்களோ, 'நீங்கள் சீட் தராவிட்டால் என்ன; வேறு கட்சிகளுக்கு போய் சீட் வாங்கி விடுகிறோம்...' என, ஓட்டம் பிடித்தனர். கடந்த சில வாரங்களில் மட்டும், நான்கு எம்.பி.,க்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, 'தேர்தலுக்குள் கூடாரம் காலியாகி விடுமோ...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை