உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அக்கப்போருக்கு முடிவு?

அக்கப்போருக்கு முடிவு?

'என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது...' என, கவலையுடன் கூறுகின்றனர், கர்நாடக மாநில காங்கிரஸ் தொண்டர்கள். இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சியின் மாநில தலைவரான சிவகுமார், துணை முதல்வராக உள்ளார். சிவகுமாருக்கு முதல்வர் பதவி மீது நீண்ட நாட்களாகவே ஒரு கண். இந்த பதவியை கைப்பற்றுவதற்கு, சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்.முதல்வர் சித்தராமையா மீதான, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய முறைகேடு விவகாரத்தை விஸ்வரூபமாக்கி, அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததே, சிவகுமாரின் உள்ளடி வேலை தான் என, சித்தராமையா தரப்பினர் கருதுகின்றனர். இதற்கு பதிலடியாக, 'கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவி, எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. விரைவில் அந்த பதவிக்கு புதுமுகம் ஒருவர் நியமிக்கப்படுவார்...' என, சித்தராமையா ஆதரவாளர்கள், அவ்வப்போது பிரச்னை கிளப்பி வருகின்றனர். சமீபத்தில், சித்தராமையா மீதான வழக்கில், அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதன் பின்னணியில், சிவகுமார் தரப்பினர் இருப்பதாக, சித்தராமையா ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.காங்கிரஸ் தொண்டர்களோ, 'சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் இடையிலான அக்கப்போர் எப்போது தான் முடிவுக்கு வருமோ...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:51

இருவரும் அப்படி செய்து மற்ற விவகாரங்கள் வெளியேய் வராமல் பார்த்து கொள்கின்றனர் என்பது கூட அப்பாவி மக்களுக்கு புரியமாட்டேங்குது


முக்கிய வீடியோ