| ADDED : செப் 14, 2026 01:03 AM
'சொந்த கட்சியில் இருப்பவர்களே, எனக்கு எதிராக குழி பறிக்கின்றனர்...' என கண்ணீர் வடிக்கிறார், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓராம். ஒடிஷா மாநிலத்தில், முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சுந்தர்கர் லோக்சபா தொகுதியில் இருந்து, ஆறு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் தான், ஜுவல் ஓராம்; பழங்குடியின மக்களிடையே செல்வாக்கு பெற்ற தலைவர். சமீபத்தில் இவரது ஆதரவாளர் ஒருவர், ஆயுத கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த ஆயுத கடத்தலின் பின்னணியில், அமைச்சர் ஜுவல் ஓராம் இருப்பதாகவும், அவருக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனால், ஜுவல் ஓராமிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக வதந்தி பரவியது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த ஜுவல் ஓராம், 'எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் தான், திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பி விடுகின்றனர். இவர்கள், வேறு கட்சிகளில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்தவர்கள். 'என் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டால், தாங்கள் அமைச்சராகலாம் என்பதற்காக, இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்; அவர்கள் எண்ணம் பலிக்காது. அமைச்சர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை...' என ஆவேசப்படுகிறார்.