‘வலுக்கட்டாய அரசியல் ஏன்?’
‘அரசியலில் ஒருவர் போணியாகவில்லை என்பதால், அடுத்த ஆளை இறக்குகிறாரா...?’ என, உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேயை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள பா.ஜ.,வினர். சிவசேனா கட்சியை நிறுவிய, மறைந்த பால் தாக்கரேயின் மகன் தான் உத்தவ் தாக்கரே. ‘என் குடும்பத்தினர் யாரும் அரசு பதவிகளை வகிக்க மாட்டார்கள்...’ என, அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் இறப்பதற்கு முன், தன் மகன் உத்தவ் தாக்கரேயை சிவசேனா கட்சிக்கு தலைவராக்கி, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதன் பின் உத்தவ் தாக்கரே, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மஹாராஷ்டிரா முதல்வரானது எல்லாம் கடந்த கால வரலாறு. இப்போது சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து விட்டதாலும், தொடர் தோல்விகளை சந்திப்பதாலும், கடும் நெருக்கடியில் இருக்கிறார் உத்தவ் தாக்கரே. ஏற்கனவே, தன் மூத்த மகன் ஆதித்ய தாக்கரேயை, கட்சியின் இளைஞரணி தலைவராக்கினார். ஆனால், ஆதித்ய தாக்கரேயின் அரசியல் மஹாராஷ்டிர மக்களிடம் அவ்வளவாக எடுபடவில்லை. இதையடுத்து, தன் இளைய மகனான தேஜஸ் தாக்கரேயையும், சமீபத்தில் களத்தில் இறக்கி விட்டுள்ளார் உத்தவ். உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகளோ, ‘தேஜஸ் தாக்கரேவுக்கு, 31 வயது தான் ஆகிறது. அவர், இயற்கை ஆர்வலர். அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர். அவரை ஏன் வலுக்கட்டாயமாக அரசியலில் இறக்கி விடுகிறார்...’ என, கவலையுடன் புலம்புகின்றனர்.