உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / எத்தனை நாள் நீடிக்கும்?

எத்தனை நாள் நீடிக்கும்?

'பதவிக்காக வெறி பிடித்து அலைபவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால், பீஹாரில் தான் துணை முதல்வர் பதவியை பார்த்து ஓட்டம் பிடிக்கும் அரசியல் தலைவர்களை பார்க்கிறோம்...' என நகைச்சுவையாக கூறுகின்றனர், பீஹார் மாநில மக்கள்.இங்கு, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதீஷ் குமார் தொடர்ச்சியாக, ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து வருகிறார். அடிக்கடி கூட்டணி மாறினாலும், முதல்வர் பதவியில் மட்டும், 'பெவிகால்' போட்டு ஒட்டாத குறையாக விடாப்பிடியாக அமர்ந்துள்ளார். ஆனால், அவரது துணை முதல்வர்கள் ஏழு முறை மாறி விட்டனர். 2015ல் நிதீஷ் குமார் முதல்வராக பதவியேற்றபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவி வகித்தார். இதன்பின், பா.ஜ., கூட்டணிக்கு நிதீஷ் தாவியதும், அந்த கட்சியை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வரானார். இதன்பின், பா.ஜ.,வைச் சேர்ந்த தர்கிஷண் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகித்தனர். மீண்டும் கூட்டணி மாறியபோது, தேஜஸ்வி துணை முதல்வரானார்.தற்போது பா.ஜ., கூட்டணிக்கு நிதீஷ் மீண்டும் தாவியுள்ளதால், சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகிக்கின்றனர். ஆனால் அந்த பதவியில் விருப்பமே இல்லாமல் தான், இருவரும் அமர்ந்துள்ளனர். 'கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏழு பேர் துணை முதல்வர்களாகி விட்டனர். தற்போது இருப்பவர்களின் பதவி எத்தனை நாளைக்கு நீடிக்குமோ...' என பீதியை கிளப்புகின்றனர், சக அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ