உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  தாக்குப்பிடிப்பது சிரமம்!

 தாக்குப்பிடிப்பது சிரமம்!

'துணை முதல்வர் பதவியில் இருப்பவர், பக்குவமாக பேச வேண்டாமா...?' என, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் உள்ளார். முறைகேடுகளில் ஈடுபடும் தன் கட்சியினருக்கு ஆதரவாக பேசுவதாகவும், அதிகாரிகளை ஒருமையில் பேசுவதாகவும், அஜித் பவார் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை மறுக்கும் வகையில், சமீபத்தில் நீண்ட விளக்கம் அளித்திருந்தார், அஜித் பவார். 'எப்போதும் மக்கள் பணியாற்றுவது தான், என் முதல் கடமை. நானும், எங்கள் கட்சியினரும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்...' என, கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் புனே நகரில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்த அஜித் பவார், 'மஹாராஷ்டிராவின் நிதி அமைச்சர் நான் தான். எங்கள் கட்சியினருக்கு ஓட்டளித்தால் தான், உங்கள் பகுதியில் நல திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்குவேன்...' என, தடாலடியாக பேசினார். 'ஒரு மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர், அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். தொடர்ந்து இப்படி உளறிக் கொண்டிருந்தால், அரசியலில் தாக்குப்பிடிப்பது சிரமம்...' என்கின்றனர், மஹாராஷ்டிரா மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ