கல்லுக்குள் ஈரம்!
'அவரைப் பற்றி நாம் வேறுவிதமாக கற்பனை செய்கிறோம். ஆனால், அவரது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கின்றன...' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள மக்கள். யோகி ஆதித்யநாத், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக உ.பி., முதல்வராக பதவி வகிக்கிறார். அவர் பதவியேற்றதிலிருந்தே, பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோரின் வீடுகள், 'புல்டோசர்' வைத்து இடித்து தள்ளப் படுகின்றன. உ.பி.,யில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த, கடத்தல் மற்றும் கொள்ளை கும்பலின் முக்கிய புள்ளிகள், 'என்கவுன்டரில்' சுட்டு வீழ்த்தப்பட்டனர். யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கைகளால் குற்றவாளிகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 'யோகி ஆதித்யநாத்தா... அவர் மிகவும் கண்டிப்பானவராச்சே...' என, மக்கள் மத்தியிலும் ஒரு கருத்து இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஆதித்யநாத் வந்திருந்தார். அங்கு தன் தாயுடன் வந்திருந்த ஒரு குழந்தையை அழைத்த முதல்வர், 'உனக்கு என்ன வேண்டும்...' என்றார். அதற்கு அந்த குழந்தை, 'எனக்கு சிப்ஸ் வேண்டும்...' என, மழலை மாறாத குரலில் பதில் அளித்தது. இதைக்கேட்டு யோகி ஆதித்யநாத், விழுந்து விழுந்து சிரித்தார். நீண்ட நேரம் அவர், மனது விட்டு சிரிப்பதை பார்த்து, அங்கு இருந்த அதிகாரிகளும், போலீசாரும், 'கல்லுக்குள் ஈரம் இருக்கும் என்பது, உண்மை தான் போலிருக்கிறது...' என, பேசிக் கொண்டனர்.