கலக்கத்தில் பினராயி விஜயன்!
'கூட்டணி கட்சிகள் என்றாலே தலைவலி தான்...' என முணுமுணுக்கிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன். கேரளாவில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசில், மார்க்சிஸ்ட் கம்யூ., தான் பிரதான கட்சி. இந்திய கம்யூ., உட்பட 11 கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளன. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் கீழ், பி.எம்.ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் இரண்டு பள்ளிகளை தேர்வு செய்து, கல்வியின் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த திட்டம், நாடு முழுதும் பெரும்பாலான மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் தயக்கம் காட்டி வந்தன. இந்நிலையில், இந்த திட்டத்தை கேரளாவில் செயல்படுத்த, சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எங்களின் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு பினராயி விஜயன் கையில் தான் உள்ளது. கூட்டணியை விரும்பினால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவை அவர் கைவிட வேண்டும்...' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல், பினராயி விஜயன் கலக்கத்தில் உள்ளார்.