அவல் கொடுத்த கதை!
'ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாகஎதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். இந்தலட்சணத்தில் இவருக்கு இது தேவையா...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார் பற்றி முணுமுணுக்கின்றனர், அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள். பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபகாலமாக வன்முறை அதிகரித்து வருவதால், 'சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டது, காட்டாட்சி நடக்கிறது...' என, ராஷ்ட்ரீயஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. வரும், 2025 துவக்கத்தில்இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு தயாராவதற்காக மாநில சுற்றுப்பயணத்தை துவக்கிஉள்ளார், நிதீஷ் குமார். இந்த பயணத்தின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமானஆனந்த் சிங், நிதீஷ் குமாருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தார். அவருடன், அரை மணி நேரத்துக்கும் மேலாக, நிதீஷ் குமார் பேச்சு நடத்தினார். இது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், நம் தலைவருக்கு வரவேற்பு அளிப்பதே சரியில்லை. அதிலும் ஆனந்த் சிங் மீது, 36க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'இப்படிப்பட்டவருடன் தனியாக பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன; வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கொடுத்த கதையாக இருக்கிறதே...' என, புலம்புகின்றனர்.