உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கருணை காட்டுவாரா மோடி?

கருணை காட்டுவாரா மோடி?

'இது தான் அரசியல்; எந்த நேரத்திலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...' என்கின்றனர், பீஹார் மாநில அரசியல்வாதிகள். இங்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2014ல், தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, மோடி பெயரை அறிவித்தபோது, அதற்கு அந்த கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, இப்போது மோடியின் தயவில் பீஹாரில் ஆட்சி கட்டிலில் நிதிஷ் குமார் அமர்ந்து உள்ளார். பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 'தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வராக மீண்டும் நிதிஷ் குமாரை பா.ஜ., தலைமை அறிவிக்காது' என்ற பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் அலுவலகத்தில், நிதிஷ் குமாருடன், மோடி அமர்ந்து பேசுவது போன்ற பிரமாண்ட படம் ஒட்டப்பட்டுள்ளது; அலுவலகத்துக்கு வரும் பலரும், இதை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். 'மீண்டும் முதல்வராக வேண்டும் என்றால், அதற்கு பா.ஜ., மேலிடம் மற்றும் பிரதமர் மோடியின் தயவு அவசியம். அதற்காகத் தான் இப்போதே நிதிஷ் குமார், 'ஐஸ்' வைக்கிறார். மோடியின் கருணைப் பார்வை, அவர் மீது விழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...' என்கின்றனர், பீஹார் அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !