குடும்பத்தின் ஓர் அங்கம் தினமலர் நாளிதழ்
'தினமலர்' நாளிதழுக்கு வயது 75. அது ஒரு பத்திரிகையாக மட்டும் அல்லாமல், குடும்பத்தின் ஓர் அங்கமாகவும் மாறிவிட்டதை நான் பல குடும்பங்களில் பார்க்கின்றேன். இதற்குக் காரணம் பத்திரிகையில் வருகிற செய்திகள் 'இன்பர்மேடிவ்'வாகவும், உபயோகமானதாகவும், அதேநேரத்தில் உண்மைத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளும்போது, சிலநேரங்களில் அது கடுமை காட்டினாலும், அதுகூட நன்மைக்குத் தான் என்று சொல்லத் தோன்றும் வகையிலே செய்திகள் அமைந்திருப்பது அதன் பக்கபலம். அதேபோல, ஒரு தலைப்புச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்பதை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது. ஒரு மிகப்பெரிய செய்தியை 'அதிரடி' என்ற தலைப்பிலே வெளியிடும் போது, அந்தச் செய்தி என்னதான் சொல்ல வருகிறது என்பதை உள்ளே போய் பார்க்கிற ஆர்வம் எழுகிறது. ஆர்வத்தை துாண்டும், அதேநேரத்தில், படித்தால் மனதிலே பதியக்கூடிய வகையிலும் அந்தப் பத்திரிகையின் வாசகங்கள் அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமை வெளி வரும் 'வாரமலர்' பல்வேறு கதைகளின் பெட்டகமாகவும், பொது அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களோடும் வெளிவருவது பலரைக் கவர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு, தினமலரின் விற்பனை உச்சத்துக்குப் போவதையும் கவனித்திருக்கிறேன். இந்த வகையிலே, நாளிதழ் என்ற முறையில், இந்த இணையதள காலத்திலும், மிகவும் வெற்றிகரமாக வருகிற தினமலர் நாளிதழை மனமார பாராட்டுகின்றேன். அந்தப் பத்திரிகை நூறாண்டுகளையும் 125, 150 என்று பல ஆண்டுகளையும் கடந்து வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழர்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.இப்படிக்கு,ராஜேஷ்குமார்எழுத்தாளர்