உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / அஞ்சாமையோடும் நேர்மையோடும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது தினமலர்

அஞ்சாமையோடும் நேர்மையோடும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது தினமலர்

வாசகர்களை கவர வேண்டும் என்பதற்காகவும், விற்பனையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல புதிய உத்திகளைக் கையாண்டு வெளிவரும் இதழ்கள் உண்டு. ஆனால், உண்மை எது என்பதை உறுதிசெய்து, அதனால் விளையும் நன்மைகள் எவை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் பெருமை தினமலருக்கு உண்டு. தெளிவான சிந்தனை, தீர்க்கமான முடிவு, தேசநலன் என்ற லட்சியப் பாதையில் பயணிக்கும் சிறப்புடைய இதழ் இது. கவர்ச்சிகரமான செய்திகளைக் காட்டிலும், கருத்தாழமிக்க செய்திகளையே சுமந்துவரும் இதழ் 'தினமலர்'. நாட்டு மக்களுக்கு நல்வழி காட்டும் கடமை ஒரு இதழுக்கு இருப்பதால், நடுநிலைமையுடன் எதற்கும் அஞ்சாது உண்மையை உரக்கச் சொல்லும் துணிவே பத்திரிகை தர்மம் ஆகும். அந்த தர்மத்தை தவறாது கடைப்பிடித்துவரும் இதழ் 'தினமலர்'. நல்லனவற்றை யார் செய்தாலும் பாராட்டுவதும், அல்லனவற்றை ஆட்சியாளர்களே செய்தாலும் அஞ்சாமல் சுட்டிக்காட்டுவதும், தினமலரின் தனித்தன்மை என்றே கூறலாம். இந்திய நாட்டின் உயர்விலும் ஒருமைப்பாட்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கை தினமலருக்கு எப்போதும் உண்டு. அதனால், மத்திய அரசின் மகத்தான திட்டங்களை பற்றியும், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் உலகளவில் இந்தியாவின் புகழை உயர்த்தும் முயற்சிகள் பற்றியும் மறக்காமல் வெளியிட்டு வரும் மாண்பையும் தினமலரில் காண முடிகிறது. அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுடன், ஆங்காங்கு காணப்படும் அவலங்களையும் அஞ்சாது வெளிப்படுத்தி வரும் தினமலரின் தூய பணிகள் இன்னும் பல்லாண்டுகள் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அன்புடன், தா.இரா. பாரிவேந்தர் நிறுவனர், எஸ்.ஆர்.எம்., கல்வி மற்றும் மருத்துவ குழுமம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ