| ADDED : டிச 08, 2025 12:09 AM
திருவாளர் டி.வி.இராமசுப்பையர் அவர்களால் தொடங்கப்பட்ட, 'தினமலர்' நாளிதழ் 75 ஆண்டுகளாக பத்திரிகை உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்து, தனது சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. அரசின் செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது. மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் பாலமாகவும் 'தினமலர்' நாளிதழ் செயல்படுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பள்ளி பருவம் முடித்து உயர்கல்வி பயில எவ்விதமான பட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கான பொது அறிவு தகவல்களை வெளியிடுவது, படித்து முடித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிடுவது போன்ற இளைஞர்களுக்கு தேவையான செய்திகளை வெளியிட்டு 'தினமலர்' நாளிதழ் வாசகர்களுக்கு பயனுள்ள வகையில் தனது சேவையை ஆற்றிவருகிறது. தற்போது 75வது ஆண்டு பவள விழா காணும் தினமலருக்கு எனது வாழ்த்து செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறேன். 'தினமலர்' நாளிதழ் பல நுாற்றாண்டுகளைக் கடந்து மென்மேலும் பல சாதனைகள் புரிய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கோவி.செழியன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்