மேலும் செய்திகள்
மக்களுக்கு தோளோடு தோளாக துணை நிற்பது 'தினமலர்'
14-Oct-2025
'தினமலர்' நாளிதழ், 75ம் ஆண்டை தொட்டு நிற்பது, தொட முடியாத வானத்தை தொட்டு நிற்பதற்கு, சமமான ஒன்றாகும். தினசரி நாளிதழ்கள், தினமும் தங்களை உயிர்ப்பித்து கொண்டே இருக்க வேண்டும். மக்களை ஈர்க்கும் செய்திகளை தருவது, அதில் உண்மைத் தன்மைகள் அடங்கி நிற்பது என, தினமும் மக்களை ஈர்க்கிற காந்த கவர்ச்சியை கொண்ட நாளிதழ்களில் ஒன்றாக, 'தினமலர்' இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.மதுரை மாவட்டத்தில் உள்ள, சிலைமலைப்பட்டி என்கிற எங்கள் ஊரில், சமுதாய மடத்தில், 'தினமலர்' நாளிதழை வாங்கி படிப்பதற்காக வைப்பர். அதை படிக்க காத்திருக்க வேண்டும். வந்திருக்கிற 20, 30 பேரும், இருக்கிற ஒரு பேப்பரை ஆளுக்கு ஒரு பக்கமாக எடுத்துக் கொண்டு, படிக்கத் துவங்குவர்.நமக்கு கிடைத்த பக்கத்தை படித்துக் கொண்டு, அடுத்த பக்கம் யாரிடம் இருக்கிறது என, காத்துக் கொண்டிருக்க வேண்டும். என் பள்ளி நாட்களில், இப்படி துவங்கியது 'தினமலர்' படிக்கும் பழக்கம். வாரமலர் படிப்பதற்கே, ஒரு கூட்டம் மொய்க்கும். நம் கைகளில் எப்போது கிடைக்கும் என, காத்திருக்க வேண்டும். அது கைகளில் கிடைத்து விட்டால், மின்சார கம்பியை பிடித்ததைப் போல், நமக்குள்ளே மின்னல் கீற்று ஒளிர்விடும்.இப்படி 'தினமலர்' நாளிதழோடு எனது சொந்தம், மண்ணுக்கும், மழைக்குமான பந்தத்தை போல, ஒன்றோடு ஒன்று கலந்து நிற்பதை, இப்போது நினைத்து பார்த்தாலும், கண்களின் ஓரம் ஈரம் கசிவதை உணர முடிகிறது.'தினமலர்' நாளிதழ் படிப்பதற்காக, காத்திருந்த நாட்களை நினைத்து திரும்பி பார்க்கிறேன். திகைத்து நிற்கிறேன். இன்று 'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' சார்பில், சிறந்த பல்வேறு நுால்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் என்னுடைய ஆறு நுால்கள் வெளியிடப் பட்டு இருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்ளாமல், எப்படி இருக்க முடியும். தினமலரின் 'ஞாயிறு மலர்' இலவச இணைப்பாக தொடங்கி 'வாரமலர்' ஆக மலர்ந்து, 'வாடாத மலராக' மணம் வீசுகிற மகத்துவத்தை எப்படி சொல்வது. அது சுவாரஸ்யமிக்க பல்சுவை விருந்து பந்தி. எதை விடுப்பது, எதை எடுப்பது என திகைத்து நிற்பதைப் போல, வாரமலரை தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதை, என் பள்ளிக்கூட நாட்களில் இருந்து, நான் தொலைந்து போய் நிற்கிறேன்.வாழ்க்கையில் தொலைந்து போகாமல் இருப்பதற்காக, என்னை தக்க வைத்தது, தகவமைக்க வைத்தது, 'தினமலர்' நாளிதழில் வெளிவந்து கொண்டிருக்கிற பல பகுதிகள் என்பதில், 'விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை' என்பதை போன்ற வரலாறாகும்.பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பான செய்திகள், எவரும் சிந்திக்க முடியாத, தலைப்பு செய்திகளின் தலைப்புகள், காலத்தை விஞ்சி நிற்கிற கட்டுரைகள், கருத்து படங்கள், அரசை குட்டு வைக்கிற செய்திகள், அரசியல் தலைவர்களை தட்டி வைக்கிற கருத்துக்கள் என்று வியக்க வைக்காத பொழுதே இல்லை.தனது நுாறாவது ஆண்டிலும் 'தினமலர்' மணம் வீசி, மக்களுக்கு மகிழ்ச்சியை தரட்டும். ஜனநாயகக் கதவுகளை திறக்கட்டும். நுாறாம் ஆண்டில் வாழ்த்து செய்தி அனுப்புகிறேன். நுாற்றாண்டு விழாவில் சந்திப்போம். 'தினமலர்' ஒரு குறிஞ்சி மலர்.இப்படிக்கு,முனைவர். வைகைச்செல்வன்,முன்னாள் தமிழக அமைச்சர், அ.தி.மு.க.
14-Oct-2025