தினமலரின் முதல் இதழின் தலையங்கத்தில், நிறுவனரும் அன்றைய ஆசிரியருமான டி.வி. ராமசுப்பையர், 'தினமலர்' இதழின் நோக்கம் என்ன என்பதை விளக்கி இருந்தார். அதில், “ஜனசமூகம் இன்னல்கள் நீங்கி, இன்ப நிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன், 'தினமலர்'ப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறோம். சுபிட்சம் நிலவவும், மக்கள் எல்லோரும் சமாதானத்துடன் இன்பமாக வாழவும் இடையறாது உழைத்து வரும் ஜனசக்திகளுக்கு எதிராகச் செல்லாமல், அவற்றிற்கு ஒரு சிறு அளவேனும் உதவி செய்யும் வகையில், 'தினமலர்' தினந்தோறும் பணியாற்றி வரும் என்று உறுதி கூறுகிறோம்,” என்று குறிப்பிட்டார். இன்றைக்கும் அதிலிருந்து அணுவளவும் மாறாமல் மக்களின் குரலாக, சாமான்யர்களின் மனசாட்சியாக, உண்மையின் உரைகல்லாக 'தினமலர்' விளங்கி வருகிறது என்பது பெருமைக்குரியது. மக்களின் உரிமைக்காகவும், தேவைகளுக்காகவும் அவர்களின் குரலாக உரத்து ஒலித்து வருகிறது 'தினமலர்'. இது சாதாரணமானதல்ல. உயர்ந்த விழுமியங்களும், லட்சியங்களும் கொண்ட ஆசிரியரும், அவர் தலைமையிலான குழுவினரின் ஒருங்கிணைப்பும், ஒத்த எண்ணமுமே இதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. 'தினமலர்' உடனான எனது பந்தம் 40 ஆண்டுகளுக்கும் மேலானது. எனது பத்தாம் வயதில் தினமலர் இதழை வாசிக்க ஆரம்பித்தேன். சிறுவர் மலரில் 'பலமுக மன்னன் ஜோ'வையும், 'எக்ஸ்ரே கண்'ணையும் எப்படி மறக்க முடியும்? 'சிறுவர் மலர்' ஆற்றிய சிறார் இலக்கியப் பணிகள் என்றும் கவனத்தில் கொள்ளத்தக்கன. அதனை வாசித்து எழுத்தாளராகப் பரிணமித்தவர்கள் பலர், நான் உட்பட. தொடரும் அந்த இனிய பந்தத்தில், சிறுவர் மலர் வாசகனாக இருந்து, குறுக்கெழுத்துப் போட்டி உட்பட பல போட்டிகளில் பரிசு பெற்று; இன்றைக்கு, 'தினமலர்' எழுத்தாளர்களுள் ஒருவனாக, இதழாளனாக நானும் இருக்கிறேன் என்பது பெருமைக்குரிய விஷயம். தனிப்பட்ட முறையில், வாசகனாக, எனக்கு எப்போதும் நன்றாக நினைவில் நிற்கும் ஒரு விஷயம் இருக்கிறது. வாரமலரில், அந்துமணியின் கேள்வி-பதில் ஒன்றில், “உங்களுக்குப் பகலில் தூங்கும் பழக்கம் உண்டா?” என்ற கேள்விக்கு, “இல்லை. பகலில் தூங்கினால் எனக்கு அசடு தட்டும்” என்ற பதில். அப்போது எனக்கு, 'அசடு தட்டும்' என்பதற்குப் பொருள் விளங்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் எண்ணெய் தேய்த்துக் குளித்த ஒருநாளில், மதியம் உண்டுவிட்டு நீண்ட உறக்கம் போட்டு எழுந்த பின், அதற்கான விடை கிடைத்தது. 'அசடு தட்டும்' என்பதற்கான பொருளை அன்று அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படி எத்தனையோ முறை தினமலரின் எழுத்தை தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். இன்றைக்குத் திரும்பிப்பார்க்கும்போது தினமலரின் பயணம், அதன் சாதனைகள், அது ஆற்றியிருக்கும் சமூகப் பணிகள் பிரமிக்க வைக்கின்றன. எதை எப்படிச் சொல்வது, எதை வெளிப்படையாகக் கூற வேண்டும், எதைக் கூறாமல் விட வேண்டும், எங்கு உரத்து ஒலிக்க வேண்டும் என்பதையும், எங்கும், எப்போதும், நேர்மையையும், வாய்மையையும் கைவிடாமல் இருக்க வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்லித் தந்த ஆசான்களில் ஒன்று 'தினமலர்'. 75 ஆண்டுகளைக் கடந்து, நூறாண்டுகளையும் கடந்து தினமலர் என்றும் வாசகர்களின் மனதைக் கவரும், வாசகர்கள் நேசிக்கும் இதழாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. - பாசு. ரமணன் (அரவிந்த் சுவாமிநாதன்) எழுத்தாளர், இதழாளர்