மலைப்பாதையில் வழிகாட்டி பலகை அமைப்பு: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
வால்பாறை: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, சாலையோரம் வீணாக கிடந்த வழிகாட்டி பலகையை, நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டில் நிறுவினர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. இங்குள்ள, 40வது கொண்டைஊசி வளைவில் மூன்று ரோடுகள் சந்திக்கின்றன. பொள்ளாச்சி, வால்பாறை, கருமலை பாலாஜி கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிக்காக, வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்து நான்கு மாதத்திற்கு மேலாகியும், வழிகாட்டி பலகை அந்த இடத்தில் வைக்கப்படவில்லை. இதனால், வெளியூர்களில் இருந்து வருவோர், எந்த வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து, 'தினமலர்'நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பெயர் பலகையுடன் கூடிய வழிகாட்டி பலகையை, அய்யர்பாடி சந்திப்பில், 40வது கொண்டைஊசி வளைவில் அமைத்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் நடவடிக்கையால் வாகன ஓட்டுநர்களும், சுற்றுலா பயணியரும் நிம்மதியடைந்தனர். இதையும் கவனியுங்க! வால்பாறையில் இருந்து சோலையாறுடேம் செல்லும் வழியில், ஐந்து ரோடுகள் பிரியும் மாதா கோவில் சந்திப்பில், ஏற்கனவே இருந்த வழிகாட்டி பலகை காணவில்லை. இதே போல் பழைய வால்பாறை ரோட்டில் மூன்று ரோடுகள் பிரியும் இடத்தில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையும் காணவில்லை. எனவே, இந்த இரண்டு இடங்களிலும், சுற்றுலா பயணியர் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும். மேலும், வழித்தட விபரம், தொலைவு குறித்து ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.