உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  கடம்பன் கோம்பைக்கு கிடைத்தது சாலை, மின்சார வசதி: தினமலர் செய்தி எதிரொலி

 கடம்பன் கோம்பைக்கு கிடைத்தது சாலை, மின்சார வசதி: தினமலர் செய்தி எதிரொலி

மேட்டுப்பாளையம்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக கடம்பன் கோம்பை மலைக்கிராமத்திற்கு, ரூ.2.23 கோடி மதிப்பில் மின்சாரம் வசதியும், ரூ.1.80 கோடி மதிப்பில் சாலை வசதியும் கிடைத்தது. பல தலைமுறைகளை கடந்தும் இருளை மட்டுமே கண்டு, ஒளி இல்லாமல் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது. கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்டது கடம்பன் கோம்பை மலைக்கிராமம். 25 குடும்பங்களை சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால், இக்கிராம மக்கள் 6 கி.மீ, தூரம் நடந்தே சென்று தான், அருகில் உள்ள நீராடி மற்றும் பில்லூர் டேம் பகுதிக்கு செல்ல முடியும். இதனிடையே, இப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் இறந்துவிட, கடந்த பிப்., 20ம் தேதி, அவரது உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து கடம்பன் கோம்பைக்கு கொண்டு வர ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. பில்லூர் டேம் அருகே நீராடி வரை வந்த ஆம்புலன்ஸ், சாலை வசதி இல்லாததால் கடம்பன் கோம்பைக்கு வரவில்லை. இதையடுத்து சுமார் 6 கி.மீ., தூரம் உடலை டோலி கட்டி ஊர் மக்கள் தூக்கி வந்தனர். இந்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளிவந்தது. இதையடுத்து, வருவாய் குழுவினர் கடம்பன் கோம்பை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் மின்சார வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, பின் மத்திய அரசின் நிதியின் கீழ் பணிகள் துவங்கப்பட்டன. இதையடுத்து, சுமார் 6 கி.மீ.தூரம் மின்சார வசதிக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டன. மேலும், கான்கிரீட் சாலை ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. மின்சார பயன்பாடு, நேற்று மாலை முதல் துவங்கி வைக்கப்பட்டது. இதனை நீலகிரி எம்.பி., ராசா பார்வையிட்டு துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மின்சாரம் கிடைத்துள்ளதை கடம்பன் கோம்பை பழங்குடியினர் பாரம்பரிய இசையை இசைத்து, நடனமாடி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே, கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் சுரேஷ்குமார், கோவை வட்டம் (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி, செயற் பொறியாளர் மேட்டுப்பாளையம் சத்யா, உதவி செயற்பொறியாளர் (திட்டங்கள்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடம்பன் கோம்பையில் உள்ள 25 வீடுகளுக்கும் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 221 மின் கம்பங்கள், 2 மின் மாற்றிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி