ஒழுகரையில் ரேஷன் கடை திறப்பு
உத்திரமேரூர்:'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, ஒழுகரையில் ரேஷன் கடை கட்டடம் நேற்று திறக்கப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியம், ஒழுகரை கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள விநாயகர் கோவில் தெருவில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி வந்தது. மழைநேரங்களில் ரேஷன் கடை கட்டட கூரையில் இருந்து மழைநீர் வழிந்து உணவு பொருட்கள் சேதமடைந்து வந்தன. எனவே, வேறொரு இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில், ஊராட்சி தொடக்கப் பள்ளி எதிரே புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஓராண்டாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இது குறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஒழுகரை ரேஷன் கடை கட்டடம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒழுகரை ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்தார்.