| ADDED : டிச 27, 2025 05:38 AM
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில், போக்கு வரத்துக்கு இடையூறாக குவிந்திருந்த எம்.சாண்ட் மணல் குவியலை, நெடுஞ் சாலைத்துறையினர் அகற்றினர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு புஞ்சையரசந்தாங்கல் இடையே பாலாற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலத்தின் வழியாக லாரியில், எம்.சாண்ட் மணல் எடுத்துச் சென்ற லாரிகளில் இருந்து சிதறிய, எம்.சாண்ட் மணல், பாலத்தின் சாலையோரம் குவியலாக இருந்தது. இதனால், சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மணல் குவியலில் சறுக்கி விபத்தில் சிக்கினர். எனவே, செவிலிமேடு பாலாறு மேம்பால சாலையோரம் குவிந்துள்ள, எம்.சாண்ட் மணலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையின் காஞ்சிபுரம் உபகோட்டம் சார்பில், செவிலிமேடு பாலாறு பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்திருந்த எம்.சாண்ட் மணல் அகற்றப்பட்டது.