அ.தி.மு.க., பொதுச் செயலர்பழனிசாமி: கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி என, வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் இந்த தேர்தல். தனக்கு பின்னால் யார் முதல்வர் என ஸ்டாலின் அறிவிப்பாரா? இண்டியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை. ஸ்டாலினுக்கு சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதற்கு இண்டியா கூட்டணி தேவை.டவுட் தனபாலு: தேர்தல்ல தப்பி தவறி, 'இண்டியா' கூட்டணி ஜெயித்தாலும், அங்கு பிரதமராக கூடிய தகுதியுள்ள தலைவர்கள் ஒரு டஜன் பேர் இருக்காங்க... ஆனா, உங்க கூட்டணியில யார் பிரதமர் வேட்பாளர், அப்படியே உங்க கூட்டணி ஜெயித்தாலும்,மத்தியில எந்த கூட்டணிக்கு ஆதரவு தருவீங்கன்னு ஏகப்பட்ட, 'டவுட்'கள் இருக்குதே... அதுக்கெல்லாம் உங்களிடம் விளக்கம் இருக்குதா?பா.ஜ.,வை சேர்ந்த ம.பி., முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஜனநாயகம் மற்றும்அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதாக கூறி வருகின்றனர். ஜனநாயகமும், அரசியலமைப்பும் பாதுகாப்பான கரங்களில் உள்ளன. இன்று அழிவின் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ் கட்சி தான்.டவுட் தனபாலு: 'தன்னை போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும்'னு பெரியவங்க சொல்லுவாங்களே... அந்த வகையில, தன் கட்சிக்கு ஏற்படும் பின்னடைவு, நாட்டுக்கே ஏற்படும் பின்னடைவுன்னு காங்., தலைவர்கள் நினைச்சுட்டாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!பத்திரிகை செய்தி: நமது மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் கார்த்திக் வரும் 9ம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார்.டவுட் தனபாலு: அப்பாடா... சிங்கம் களம் இறங்கிடுச்சு... இனி, அ.தி.மு.க.,வின் வெற்றியை அந்த ஆண்டவனால கூட தடுத்து நிறுத்த முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!