ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: கோவை மாவட்டத்தில், உலகப்புகழ் பெற்ற மருதமலை கோவிலில் யானை வழித்தடம் என்ற பெயரில் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், 1,200 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள காருண்யா நிறுவனம் யானை வழித்தடத்திற்குள் வராது. பல நுாறு ஆண்டுகளாக லட்சக்கணக்கான ஹிந்துக்கள் வழிபடும் கோவில்கள் மட்டும் யானை வழித்தடத்தில் வரும் என்பது எந்த வகையில் நியாயம்? டவுட் தனபாலு: 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல, எவ்வளவு அடிச்சாலும், தாங்குவது ஹிந்துக்கள் மட்டும் தானே... அதனால தான், இப்படி ஏடாகூடமா யோசிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்றாண்டு காலத்தில், நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்ன என்பதற்கு, தினமும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. எப்போதும் நான் சொல்வது, இது என் அரசு அல்ல; நம் அரசு. அந்த வகையில், நம் அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. டவுட் தனபாலு: பழைய பென்ஷன் திட்டம், மாதாந்திர மின் கணக்கீடு, காஸ் விலை குறைப்பு உள்ளிட்ட நிறைவேற்றாத வாக்குறுதிகள், மகளிர் உரிமை தொகை மறுக்கப்பட்ட பெண்கள்னு பலன் அடையாதவங்க எண்ணிக்கையும் இன்னொரு பக்கம் அதிகமா இருக்குதே... சொச்ச ரெண்டு வருஷத்துலயாவது, அவங்க குறைகளை களைந்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!பத்திரிகை செய்தி: குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், தமிழகத்தில் முதல் கட்டமாக, ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை துவங்கியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பால் விற்பனையை துவங்கவும் அமுல் முடிவெடுத்துள்ளது. அமுல் வரவால் ஆவின் விற்பனை முடங்கும் அபாயம் உள்ளது.டவுட் தனபாலு: வடமாநிலங்கள்ல இருந்து தொழிலாளர்கள் தான் பிழைப்பு தேடி வந்தாங்கன்னு பார்த்தா, அமுலும் வந்துடுச்சா... அமுலின் வருகை, ஏற்கனவே தள்ளாடிட்டு இருக்கிற ஆவினை தரையில சாய்ச்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!