உள்ளூர் செய்திகள்

" டவுட் தனபாலு

காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி: சிதம்பரத்தின் நேர்மை குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எந்த சந்தேகமும் இல்லை. '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், அவர் மீதான கோர்ட் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளிவரும் வரை காத்திருக்காமல், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.

டவுட் தனபாலு: இது, உங்களுக்கு வழக்கமானது தானே... நீங்களா எந்த விஷயமும் செய்ய மாட்டீங்க... கோர்ட், நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டப்புறம் தான் நடவடிக்கையே எடுப்பீங்க... இந்த விஷயத்துலயும், கோர்ட்ல குட்டு வாங்கணும்னு உங்க தலையெழுத்து இருந்தா, அதை யாரால மாத்த முடியும்...?

சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வழக்கறிஞர் வேணுகோபால்: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை கண்காணிப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்த வேண்டும். விசாரணையில் இருந்து தவறினால் மட்டுமே கோர்ட் தலையிடலாம். தயவு செய்து, சி.பி.ஐ., அமைப்பை வழக்கம் போல செயல்பட அனுமதியுங்கள்.

டவுட் தனபாலு: 'வழக்கம்' போல செயல்பட விடலாம் தான்... ஆனா, குவாட்ரோக்கியை விடுதலை பண்றதும்... தேவைப்பட்ட நேரத்துல மாயாவதியையும், முலாயமையும் மிரட்டுறதும் மட்டும் தான் உங்க, 'வழக்கமா' இருந்திருக்கு... அப்புறம் எப்படி சுப்ரீம் கோர்ட் சும்மா இருக்க முடியும்...?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலை ஒரு வாரம் ஒத்தி வைக்க வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய முடியும்.

டவுட் தனபாலு: சட்டசபைத் தேர்தல் முடிஞ்ச நாள்ல இருந்தே, 'உள்ளாட்சித் தேர்தல்ல தனித்துப் போட்டியிடுவோம்'னு சொல்லிட்டு இருந்தீங்களே... இன்னுமா வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கலை...? 'இருந்தாத் தானே தேர்ந்தெடுக்கிறது'ன்னு சொல்றீங்களா...? ஐயோ, பாவம்...!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ