இந்திய கம்யூ., கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன்: எளிய மக்களின் கோரிக்கையை த.வெ.க., அரசு நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரச்னைகள் தொடர்பாக, எங்கள் கருத்துக்களுக்கும் செவி மடுக்க வேண்டும். எங்கள் ஆதரவு த.வெ.க.,வுக்கு தேவைப்படலாம், தேவைப்படாமலும் போகலாம். ஆனால், த.வெ.க., அரசுக்கு கொடுத்த ஆதரவை ஆறு மாதங்களில் திரும்ப பெற்று, பதற்றமான அரசியல் நிலையை உருவாக்க மாட்டோம். டவுட் தனபாலு: சரியா போச்சு... ஏற்கனவே, ரெண்டு தொகுதி இடைத்தேர்தல்ல ஜெயிச்சிட்ட த.வெ.க., அடுத்து, ஐந்து தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்துட்டு இருக்கு... அதனால, ஆதரவை நீங்க வாபஸ் வாங்கினாலும் எந்த அரசியல் பதற்றமும் வராது என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அந்த காலத்தில், கல்லுாரி விழாவில் துரைமுருகன் பேச்சை கேட்டு அசந்து, அவரது கல்விக்கு எம்.ஜி.ஆர்., உதவினார். பின், தனிக்கட்சி தொடங்கியபோது துரைமுருகனிடம், ‘என் கட்சியில் சேர்’ என, எம்.ஜி.ஆர்., அழைத்தார். ஆனால் எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் என் கல்விக்கு உதவியிருக்கலாம்; என் மீது அன்பை பொழிந்து இருக்கலாம். கொள்கை என வரும்போது, எனக்கு தலைவர் கருணாநிதி தான். அவரோடு தான் இருப்பேன்’ என துரைமுருகன் சொன்னார். பொது வாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, துரை முருகன் இருக்கிறார். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... கருணாநிதிக்கு மட்டுமில்ல; உங்களுக்கும், உங்க மகன் உதயநிதிக்கும், ஏன், உங்க பேரன் இன்பநிதிக்கும் அவர் விசுவாசமா தான் இருக்காரு... காலமும், இயற்கையும் கைகொடுத்தால், இன்பநிதியின் வாரிசுக்கும் துரைமுருகன் விசுவாசமா இருப்பார் என்பதில், ‘டவுட்’டே இல்லை! lll காங்., கட்சியைச் சேர்ந்த, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: ராவணனான நம் பிரதமர் மோடியை வீழ்த்த, எங்கள் கட்சி தொண்டர்களான, ‘வானரப்படை’ வந்துள்ளது. ஓட்டு திருட்டுக்கு எதிராக, நாங்கள் தொடர்ந்து போராடுவோம். மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க சதி செய்யவே, நாடு முழுதும் 13.5 கோடி ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன; மேலும், 20 கோடி ஓட்டுகள் நீக்கப்பட உள்ளன. டவுட் தனபாலு: பிரதமர் மோடியை ராவணன்னு சொல்றீங்க... உங்க கட்சியினரை வானரப்படைகள்னும் சொல்றீங்க... அதேநேரம், ‘ராகுல் தலைமையில் ராமராஜ்யம் அமைப்போம்’னு ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க... ராகுல் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லையோ என்ற, ‘டவுட்’ தான் வருது! lll