உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்: இந்தியாவில் உள்ள, 86,000 நீதிமன்றங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. ஆட்சி, அதிகாரத்திற்கு வராமல், 100 ஆண்டுகள் ஆனாலும், வாழும் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை மட்டுமே எதிர்க்கிறோம்; மற்ற கட்சிகளை வரவேற்கிறோம். டவுட் தனபாலு: ஆட்சி, அதிகாரத்துக்கு வராமல் இருப்பதால் தான், உங்க கட்சியினர் மீது எந்த ஊழல் வழக்கும் இல்ல... ஆனா, தமிழகத்தில், உங்க கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., அமைச்சர்கள் நிறைய பேர் மீது சொத்து குவிப்பு வழக்குகள் இருக்கே... அது, உங்களுக்கு உறுத்தலா தெரியலையா என்ற, 'டவுட்' வருதே! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்கள் முருகன் நடத்திய வேல் யாத்திரை, அண்ணாமலை நடத்திய, 'என் மண்; என் மக்கள் யாத்திரை' ஆகியவற்றால், தமிழகத்தில், 18 சதவீதமாக, பா.ஜ., ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீர வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, வரும் தேர்தலின் போது ஓட்டுப்பதிவிலும் நீடிக்க வேண்டும். டவுட் தனபாலு: முருகனும், அண்ணாமலையும், அரும்பாடுபட்டு, 18 சதவீதம் ஓட்டு வங்கியை பா.ஜ.,வுக்கு உருவாக்கி வச்சிருக்காங்க... இதை, உங்க தலைமையில், 28 சதவீதமா உயர்த்தி காட்டினால், அடுத்த அஞ்சு வருஷத்துக்கு மாநில தலைவர் பதவியில் இருந்து, உங்களை யாரும் அசைக்கவே முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை! தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஊட்டி உட்பட, 11 நகரங்களில் அரசு மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வரப்பட்டன. தற்போது, கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், 60 சதவீத இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க வேண்டும்; அந்த பொறுப்பு நமக்கு உள்ளது. 2026ல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் போது, இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். டவுட் தனபாலு: இப்படி, பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி...? கூட்டணி கட்சி என்ற முறையில், பழனிசாமியிடம் வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்க வைப்பீங்களா அல்லது பா.ஜ.,வுக்கும் ஆட்சியில் பங்கு வாங்கி, நீங்களே நடவடிக்கை எடுப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை