உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

தாகத்தை தீர்க்க ஐந்து அம்ச திட்டங்கள்: சாதித்துக்காட்டிய தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள், தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த திருவள்ளுவர், 'நீரின்றி அமையாது உலகு' என்றார். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி 'உலக தண்ணீர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதம் உள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால், 70 சதவீத நீர் பரப்பளவில், 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் குறிப்பிட்ட சதவீதம் பனிக்கட்டிகள் உள்ளன. ஆனால், கடந்த 2023ல் தென்மேற்கு, வடகிழக்கு இரண்டு பருவ மழையும் பொய்த்தது. வழக்கமான மழைக்காலங்களில் பெய்ய வேண்டிய மழையும் பெய்யவில்லை.

வறட்சி

மழை பொய்த்து போனதால், பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் காவிரி ஆற்றில் நீர் இல்லை. மற்றொரு புறம், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதன் விளைவாக நகரில், 6,900 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால், பிப்ரவரியில் பெங்களூரில் மெல்ல தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே வேளையில் வெயிலும் வாட்டி வதைத்தது. 'குளு குளு பெங்களூருவா இது' என்று மக்கள் ஏங்க துவங்கினர்.மார்ச் மாதத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடி கொண்டிருந்தது. மக்கள் குடிப்பதற்கும் தண்ணீரின்றி அவதிப்பட்டனர். சிலர், வாரம் ஒரு முறை மட்டுமே குளித்த உதாரணமும் உண்டு. பள்ளி, கல்லுாரிகளிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.

தட்டுப்பாடு

ஏன், முதல்வர் அதிகாரப்பூர்வ பங்களாவான கிருஷ்ணா இல்லத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு டேங்கரில் வினியோகிக்கப்பட்டது. தண்ணீர் பிரச்னை தீர்க்கும்படி மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். அரசை திட்டித் தீர்த்தனர். 5 ரூபாய் சுத்தமான குடிநீர் மையங்களில், கேன்களுடன் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.பெங்களூரு தண்ணீர் பிரச்னை, சர்வதேச அளவில் பேசப்பட்டது. ஒரு காலத்தில் தென் ஆப்ரிக்கா தலைநகர் கேப்டவுனில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது போல், பெங்களூரில் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். அப்போது தான், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் பதவியில் அமர்ந்து மூன்று மாதங்களே ஆன ராம்பிரசாத் மனோகர், பிரச்னை தீர்வு காண யோசித்தார். என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தால், தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்பதை சிந்தித்தார்.

போர்க்கால நடவடிக்கை

ஏற்கனவே பல்வேறு பொறுப்புகளில் இருந்த அனுபவத்தை கொண்டு, ஐந்து அம்சங்கள் கொண்ட திட்டத்தை உருவாக்கினார். அதை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார். இதற்காக சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து, அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். அதில் வெற்றியும் கண்டு, மக்களின் நன்மதிப்பையும், ஆட்சியாளர்களிடமும் நல்ல பெயரை பெற்றுள்ளார்.நீச்சல் குளங்களுக்கு காவிரி மற்றும் ஆழ்துளைக்கிணற்று நீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. வாகனங்கள் சுத்தப்படுத்துவோர் காவிரி நீர் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குடிசை வாழ் பகுதிகளில், 500, 750, 1,000 லிட்டர் அளவு கொண்ட 500க்கும் அதிகமான டேங்கர்களை பொருத்தி, தினமும் டேங்கர்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான குடிசை வாழ் பகுதி மக்கள் பயனடைந்தனர்.

அபராதம் விதிப்பு

மேலும், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான டேங்கர்கள் மட்டுமின்றி, மாநகராட்சி, தனியார் டேங்கர்கள் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. வழக்கமாக, 10,000 லிட்டர் கொண்ட டேங்கர் நீர், 750 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில், பிரச்னையின்போது, 2,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. அத்தகையோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.காவிரி நீரில் வாகனங்கள் கழுவியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. வாரந்தோறும் ஒரு மணி நேரம், தொலைபேசி மூலம், பொதுமக்கள் குறைகளை கேட்டு தீர்த்து வைக்கிறார். உச்சகட்ட தண்ணீர் பிரச்னையை, குறுகிய கால கட்டத்தில், தீர்த்து வைத்ததற்காக, ஐ.நா., சபை, மத்திய ஜல்சக்தி துறை, எப்.கே.சி.சி.ஐ.,யும் ராம்பிரசாத் மனோகரை வெகுவாக பாராட்டினர். இவர், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்துக்கு ஏற்ப நடவடிக்கைகள்

பருவ நிலை மாற்றம், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால்தான் தண்ணீர் பிரச்னை எழுந்தது. ஆனால், காலாகாலத்துக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடிந்தது. அடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்ததிட்டம் வகுத்து வருகின்றோம். என்னை ஊக்கப்படுத்திய,முதல்வர், துணை முதல்வர், ஒத்துழைத்து வரும் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. ராம்பிரசாத் மனோகர், தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம்

என்னென்ன திட்டங்கள்?

1. சிக்கனம், சேமிப்பு

தேவையை விட அதிக தண்ணீர் விரயமாவதை தடுத்து சேமித்து, சிக்கமான பயன்படுத்துவது இதன் நோக்கம். இதற்காக, குழாய்களில் ஏரியேட்டர்கள் பொருத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் என அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தும் இடங்களில் ஏரியேட்டர் பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது. குழாய்களில் பாத்திரங்கள், கை, கால்கள் கழுவும்போது, அதிக தண்ணீர் விரயமாகும். ஏரியேட்டர்கள் பொருத்துவதால், 20 சதவீதம் தண்ணீர் சேமிக்க முடியும் என்பது அவரது கணக்கு. இப்படி, 15 - 20 நாட்களில், நகர் முழுதும் அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 7 லட்சம் ஏரியேட்டர்கள் பொருத்தப்பட்டன.

2. சுத்திகரிக்கப்பட்ட நீர்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் வீணாக கால்வாயில் கலப்பதை தவிர்த்து, அதை சுத்திகரிக்க செய்து, விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டது. கட்டடங்கள் கட்டுவதற்கு, தோட்டங்கள், பூங்காக்கள் பயன்பாட்டுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை, பெரிய பெரிய நிறுவனங்கள் வாங்கிச் செல்லும்படி, அவர்களை ஒப்புக்கொள்ள வைத்தார். 1,000 லிட்டர், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் எவ்வளவு தண்ணீர் கேட்டாலும், வழங்கப்படும் என்று பெரிய நிறுவனங்களுக்கு உறுதி அளித்தார்.

3. மழைநீர் சேமிப்பு

மழைநீர் சேமிக்கும் புதிய வழிமுறையை அமல்படுத்தினார். அதாவது வீட்டின் அருகில் குழிகள் தோண்டி, அதை சிமென்ட் வளையங்களால் மூடப்பட்டன. மழைநீரை குழாய்கள் மூலம், நேராக அந்த குழிக்குள் விழும்படி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, எதிர்காலத்துக்கு உதவும் என்பது நோக்கமாகும். இவ்வாறு நகர் முழுதும் ஆங்காங்கே 1,000 குழிகள் தோண்டப்பட்டன. வீடு கட்டுவோர், அடுக்குமாடி குடியிருப்புகள் என பலரையும், இதன் நன்மைகள் குறித்து சமூக வலை தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. தனி தனியாக இருக்கும் 10 வீடுகளுக்கு ஒரு இடத்தில் குழிகள் தோண்டி, சமுதாய மழை நீர் சேமிப்பு திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

4. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

நிலத்தடி நீர்மட்டம் குறைவால், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் பாதாளத்துக்கு சென்று, வற்றி விடுகிறது. இதை அறியாமல் பிற்காலத்தில் பாதிக்கப்படுகிறோம். இதை தடுக்கும் வகையில், ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டது. இதன் மூலம், குறிப்பிட்ட அளவில் தண்ணீர் வற்றுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதை கணித்து, எச்சரிக்கை அடைந்து, வற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும். இப்படி தொழில்நுட்பம் மூலம் தண்ணீர் சேமிப்பதற்கு, இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகளின் உதவியையும் பெற்றார்.

5. ஒருங்கிணைந்த நடவடிக்கை

புதிய திட்டங்களை பயன்படுத்துவோர், மற்றவர்களுக்கும் விளக்கி, தண்ணீர் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடியிருப்பு நலச்சங்கங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. 'வருண மித்ரா' என்ற 10,000 செயல்வீரர்களுக்கு பயிற்சி அளித்து, விழிப்புணர்வுக்கு பயன்படுத்தி கொள்ளப்பட்டனர். இந்த பஞ்ச திட்டங்களை, நமது நாட்டின் தலைநகர் டில்லியில் பயன்படுத்துவது குறித்து, ராம்பிரசாத் மனோகரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவரும் ஆலோசனை கூறினார்.

எவ்வளவு தேவை?

பெங்களூரில் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். 10.89 லட்சம் கட்டடங்கள் உள்ளன. 2,600 எம்.எல்.டி., நீர் தேவைப்படுகிறது. காவிரியில் இருந்து, 1,450 எம்.எல்.டி., நீர் வருகிறது. 1,200 எம்.எல்.டி., நீர் நிலத்தடி நீரில் இருந்து கிடைத்து வந்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளைக்கிணறுகள் வற்றியதால், காவிரி நீரின் தேவை அதிகரித்தது.

காவிரி 5ம் கட்ட திட்டம்

பெங்களூரு நகரில் சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கும் வகையில், 5ம் கட்ட திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. தற்போது சோதனை நடந்து வருகிறது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்துக்கும் அப்பகுதி மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கும். ஏற்கனவே ஆன்லைனில் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை