உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா

ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழர்கள் உலகின் எந்த இடத்துக்குச் சென்றாலும் சாதனை படைத்து வருவது அறிவோம். அதுவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.அந்த வகையில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ருத்ரப்பன் - அமர்ஜோதி தம்பதியின் மகள் ராகபிரியா, கர்நாடகாவில் சாதனை படைத்து வருகிறார். ஏழாம் வகுப்பு முதலே, பொது அறிவு செய்திகளை நாளிதழ்களில் விரும்பி படித்துள்ளார்.பிளஸ் 2 முடித்த பின், மருத்துவர் கனவோடு, பி.டி.எஸ்., படித்தார். அப்போது, மகளின் திறமையை அறிந்து, இந்திய குடியுரிமை பணிகள் குறித்து, தந்தை விளக்கி உள்ளார். 'ஒருமுறையாவது முயற்சி செய்' என, மகளை ஊக்கப்படுத்தி உள்ளார்.

28வது ரேங்க்

அதன்படியே, யு.பி.எஸ்.சி., தேர்வில் 2009ல் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 472வது ரேங்க் பெற்று, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். 2011ல் இரண்டாவது முறையாக தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 28வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது.முசவுரியில் பயிற்சி முடித்த பின், உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் பயிற்சி உதவி கலெக்டராக பணிபுரிந்தார். 2013ல் தாவணகெரே துணை மண்டல உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அடுத்து, சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக செயலாற்றினார்.அப்போது, இவரது பெரும் முயற்சியாலும், திட்டமிட்டு செயல்பட்டதாலும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய அளவில், சிக்கமகளூருக்கு திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக விருது கிடைத்தது. இதற்காக மாவட்டம் முழுதும் இலவசமாக கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன.

நஷ்டத்தில் இருந்து லாபம்

கலபுரகியில் ஜெஸ்காம் நிர்வாக இயக்குனராக 2017ல் இருந்தபோது, 80 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார். முறைகேடாக மின் இணைப்பு வழங்கியது, பில் செலுத்தாமல் இருப்பது என்பதை அறிந்தார். இதை முறைப்படுத்தி பின், ஒரே ஆண்டில், 19 கோடி ரூபாய் லாபம் கொடுக்கும் நிறுவனமாக மாற்றிக் காண்பித்தார்.முதல் முறையாக யாத்கிர் கலெக்டர் பணியில் 2020ல் நியமிக்கப்பட்டார். மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால், எப்படியாவது முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்தார். இதன்படி, கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு என பல துறைகளிலும் யாத்கிர் மாவட்டம் முன்னேற்றம் கண்டது. இதை அறிந்த பிரதமர் மோடி, அவரை பாராட்டி மகிழ்ந்தார்.பின்னர், பெங்களூரில் உள்ள தேசிய வாழ்வாதாரத் திட்ட இயக்குனராக 2022ல் நியமிக்கப்பட்டார். முதல் பணியாக, பி.பி.எல்., குடும்பங்களில் உள்ள அனைத்து மகளிரையும் சுய உதவி குழுக்களில் சேர்க்கத் திட்டமிட்டார். மொத்தம் 30 லட்சம் பெண்களை சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

ரூ.400 கோடி நிதியுதவி

ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 400 கோடி ரூபாய் சுற்று நிதி வழங்கப்பட்டது. விரும்பு குடிசை தொழில் செய்ய அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 'ஸ்த்ரி சாமர்த்திய யோஜனா' என்ற திட்டம் மூலம் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்தி தரப்பட்டது. இப்படி 12,000 ஏழைப் பெண்கள் பயன்பெற்றனர்.மேலும், ஐ.ஐ.எம்., உடன் இணைந்து சுய தொழிலில் சாதனை படைத்து வரும் பெண்களை கண்டறிந்து, அவர்களிடம் ஐடியாக்கள் பெற்று, 500 மகளிருக்கு பயிற்சி அளித்து, 5 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில், 1.60 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் இருந்தன. ராகபிரியா முயற்சியால், தற்போது 2,59,939 குழுக்கள் உள்ளன.

ஜி - 20 பிரதிநிதிகள்

குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள், டில்லி, கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2023ல் நடந்த ஜி - 20 கூட்டங்களில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.மேலும், ஆப்கானிஸ்தானில் தாலிபான் போர் மூண்டபோது, ஐ.நா., சபை மூலம் சென்னப்பட்டணா மர பொம்மைகளை, ஆப்கானிஸ்தான் அங்குள்ள குழந்தைகள் விளையாடடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.தற்போது, தொழில்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவன கமிஷனராக பெங்களூரில் பணிபுரியும் அவர், சமுதாயத்துக்கு நல்ல சேவையை செய்ய காத்திருக்கிறார்.இவரது கணவர் வெங்கடேஷ் குமார், மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.விவசாயியின் நெகிழ்ச்சி தருணம்மருத்துவர் ஆவது தான் என் கனவு. என் தந்தையின் உந்துதல் காரணமாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியானேன். உண்மையிலேயே கர்நாடக மக்கள் மிகவும் அன்பு கொண்டவர்கள். ஜெஸ்காம் நிர்வாக இயக்குனராக இருந்தபோது, கொப்பாலில் இருந்து ஒரு விவசாயி போன் செய்து, தன் பம்ப்செட்டுக்கு, இரண்டரை ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கவில்லை என்றார். சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு 10 நாட்களில் இணைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த விவசாயி 300 கி.மீ., பயணம் செய்து, என் அலுவலகத்துக்கு நேரில் வந்து, இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை எப்போதும் மறக்க மாட்டேன். மாலை நேரங்களில் நுாலகத்தில் படித்து தான் ஐ.ஏ.எஸ்., தேர்வு என்னை தயார்படுத்திக் கொண்டேன். திட்டமிட்டு படித்தால் வெற்றி உறுதி.- ராகபிரியாஐ.ஏ.எஸ்.,- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rangarajan
ஜூலை 15, 2024 21:49

உண்மையில் பாராட்டப்பட வேண்டிய அதிகாரி. இவரின்செய்ககைக்கு ஓரு சல்யூட்.


Vijayakumar Srinivasan
ஜூலை 19, 2024 00:14

வாழ்த்துக்கள்.அவரதுபணிசிறப்பாக.அர்பணிப்புகாக.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ