| ADDED : ஜூன் 01, 2024 01:19 AM
குவஹாத்தி, வடகிழக்கு மாநிலத்தின் முதல், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை, அசாமில் உள்ள தனியார் பள்ளியில் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம், நாம் கேட்கும் கேள்விகளுக்கு இணையத்தில் இருந்து திரட்டி வைத்திருக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து விரிவான பதில் அளிக்கும்.அரசு துறைகள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். பள்ளிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோ ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நிடி ஆயோக்கின் அடல் சிந்தனை ஆய்வகத்துடன் இணைந்து, கல்வி தொழில்நுட்பம் சார்ந்த தனியார் நிறுவனம், 'ஐரிஸ்' என்ற ஏஐ ரோபோவை, அசாமில் உள்ள தனியார் பள்ளியில் அறிமுகப்படுத்தி உள்ளது. குரல் வழியாக கட்டுப்படுத்தும் வகையில் இதை வடிவமைத்துஉள்ளது.ஐரிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவிடம், மாணவர்கள் ஆர்வமுடன் கேள்விகளை கேட்கின்றனர்.அதை உள்வாங்கி கொண்டு, அது விரிவான பதில்களை தருகிறது. இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.இது குறித்து, அப்பள்ளியின் ஆசிரியை கூறியதாவது:ஐரிஸ் ஏஐயிடம் பாடத்திட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து மாணவர்கள் கேள்விகளை கேட்டனர். எதை பற்றிய கேள்விக்கும் உடனடியாக, உதாரணங்கள் மற்றும் குறிப்புகளுடன் பதிலளித்தது.இந்த ரோபோ, குரல் வழியாக பதிலளிப்பது மட்டுமின்றி, மாணவர்களுடன் கைகுலுக்குவது போன்ற செய்கைகளையும் செய்யும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மாணவர்களுக்கு புதிய கற்றல் அனுபவத்தை வழங்குவதில் ஒரு மைல்கல்லாக விளங்கும்.இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இதுபோன்ற ஏஐ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.