மேலும் செய்திகள்
நாயை தேடிய தம்பதியின் பாசப் போராட்டம்
18-Feb-2025
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அலங்காரகுளம் முருகன் கோயிலில் தெற்கு பிரான்ஸ் மோண்ட்பெல்லியர் நகரைச் சேர்ந்த தம்பதி யுவெலஸ் அர்னெய்ல் லே - ஜூலியென் சரெளனா லேக்கு ஹிந்து பாரம்பரியப்படி மணி விழாவை கிராமத்தினர் நடத்தி விருந்து அளித்தனர்.தெற்கு பிரான்ஸ் மோண்ட்பெல்லியர்நகரத்தைச் சேர்ந்தவர் யுவெஸ் அர்னெய்ல் லே 70. இவரது மனைவி மேற்கு ஆப்பிரிக்கா டோகோ தலைநகர் லோமைச்சேர்ந்த ஜூலியென் சரெளனா லே 60. இத்தம்பதியின் நண்பர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆ.விளாக்குளம் அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மார்க் அமலன். இவர் ஹிந்து கலாசாரம், மொழி, இனம், பண்பாடு குறித்து அத்தம்பதியிடம் அடிக்கடி பெருமையாக கூறியுள்ளார். இதில் ஈர்க்கப்பட்ட தம்பதி இந்தியாவிற்கு சில வாரங்களுக்கு முன் சுற்றுலா வந்தனர்.பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் பங்கேற்றனர். ஹிந்துக்களின் புனிதத்தை கண்டு வியந்ததுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை கண்டு நெகிழ்ச்சியுற்றனர். பல்வேறு கோயில்களுக்கு சென்றனர். ஹிந்து பாரம்பரியப்படி கோயிலில் ஜூலியென் சரெளனா லேவுக்கு 60 வயதாவதால் மணி விழா செய்ய வேண்டும் என நண்பர் பிரான்சில் தற்போதுள்ள மார்க் அமலனிடம் தெரிவித்தனர். அவர் முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பெற்றோர், உறவினர்கள், கிராமத்தினரிடம் தெரிவித்தார்.அதையடுத்து அத்தம்பதியை முத்துராமலிங்கபுரம் கிராமத்திற்கு மார்க் அமலன் கிராமத்தினர் வரவழைத்தனர். அலங்கார குளம் அருகே உள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி முருகன் கோயிலில் 60 வயதில் கொண்டாடப்படும் மணி விழா போல அத்தம்பதிக்கு நடத்தினர். மணமகனுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை,மணமகளுக்கு பட்டுச்சேலை அணிந்து மாலை மாற்றி, தாலி கட்டி 60ம் கல்யாணம் நடந்தது. மேலும் கிராமத்தினர் கிடா வெட்டி திருமண விருந்து அளித்ததோடு மட்டுமில்லாமல் மணமக்களுக்கு சீர், வரிசைகளையும் வழங்கினர்.மணி விழாவை நடத்திய அ.விளாக்குளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம் கூறுகையில், ''அண்ணன் மகன் மார்க் அமலன் பிரான்சில் பணிபுரிகிறார். அவரது நண்பர்கள் அர்னெய்ல் லேவும், சரெளனா லேவும். அவர்களின் விருப்பத்தின்படி ஹிந்து கலாசார, பாரம்பரியத்தில் மணி விழா நடத்தி வைக்கப்பட்டது,'' என்றார்.
18-Feb-2025