பழனி எலுமிச்சம் பழம் ரூ.5.09 லட்சத்துக்கு ஏலம்
பழனி: பழனி முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்த எலுமிச்சம் பழம், 5 லட்சத்து 9,000 ரூபாய்க்கு ஏலம் போனது.புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் வசிக்கும் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் ஆண்டுதோறும் தைப்பூசத்திற்கு மூன்று நாட்கள் பழனியில் தங்கி, சுவாமி தரிசனம் செய்வர். இந்த ஆண்டு, 300க்கும் மேற்பட்டோர் பழனி சென்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தைப்பூச வழிபாடு நடத்தினர். அன்னதானம் வழங்கும் போது, ஒரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்தனர். அதே போல, ஒரு எலுமிச்சம் பழத்தை முருகன் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். மொத்தமாக இந்த பழங்களை பழனியில், அந்த சமூகத்தினருக்கு சொந்தமான மடத்தில் வைத்து ஏலம் விட்டனர். ஏலத்தில் பங்கேற்ற ஒருவர், முருகன் பாதத்தில் வைத்து பூஜை செய்த எலுமிச்சம் பழத்தை, 5 லட்சத்து 9,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். பழனி முருகன் கோவிலில் பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழம் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.