மதுக்கடையில் கொள்ளையடித்தவர் மட்டையானதால் சிக்கினார்
ஹைதராபாத்: மதுக்கடையில் பணத்தை கொள்ளையடித்தவர், அங்கேயே புத்தாண்டை கொண்டாடியதால், மதுபோதையில் மயங்கி, போலீசில் சிக்கினார்.தெலுங்கானாவின் மேதக் மாவட்டத்தில் உள்ள ஒரு மதுக்கடையை, நேற்று காலை கடை ஊழியர்கள் திறந்தனர். உள்ளே ஒருவர், மதுபோதையில் மயங்கி கிடந்தார். அருகே, பல காலி மது பாட்டில்கள் கிடந்தன. பணமும் இறைந்து கிடந்தன. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல் நாள் இரவு 10:00 மணிக்கு கடையை மூடியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு திறந்துள்ளனர். இதற்குள் இரவில் அந்த மதுக்கடையின் மேற்கூரையை அகற்றி உள்ளே நுழைந்து, சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்து, பணத்தை கொள்ளையடித்து அழகாக மூட்டைக் கட்டி வைத்துள்ளார்.புத்தாண்டுக்கு முன்பாக பெரிய தொகை கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் சுற்றிலும் மதுபாட்டில்கள் இருந்துள்ளது, அவருடைய ஆசையை துாண்டியது. பல மது பாட்டில்களை காலி செய்த அவர், மயங்கி விழுந்தார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 24 மணி நேரமாகியும் இன்னும் கண் முழிக்கவில்லை. போதை தெளிந்து, அவர் கண் முழித்தால் தான், அவர் யார் என்ற விபரம் தெரிய வரும் என, போலீசார் கூறியுள்ளனர்.