விழுப்புரம்: மொபைல் போனை சர்வீஸ் செய்ததற்கு, கடை உரிமையாளர் பணம் கேட்டதால், கடையில் பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், காகுப்பத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன், 25; விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பஸ் நிறுத்தத்தில் மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த மகாராஜபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், 23, பழுதான தன் மொபைல் போனை சர்வீஸ் செய்ய கொடுத்தார்.அப்போது, ஜாகிர் உசேன், 'மொபைல் போன் சர்வீசுக்கு 800 ரூபாய் ஆகும்' என, கூறியுள்ளார். இதற்கு, 'என்னிடம் காசு கேட்டால் கடையை குண்டு போட்டு அழிச்சிடுவேன்' என, அருண்குமார் கூறியுள்ளார். இதை ஜாகிர் உசேன் பொருட்படுத்தவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு கடைக்கு வந்த அருண்குமார், மொபைல் போனை கேட்டார். ஜாகிர் உசேனின் தம்பி ஷேக் அலாவுதீன், 20, கடையில் இருந்தார். அவர், மொபைல் போனை சர்வீஸ் செய்ததற்கு, 800 ரூபாய் தரும்படி, அருண்குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு அருண்குமார், 'நான் சொல்லியும் எங்கிட்டியே பணம் கேட்கிறாயா... நீ ஒண்ணும் சரிப்பட மாட்ட... இரு வர்றேன்...' என்று கூறி சென்றார். சிறிது நேரத்தில் கடைக்கு திரும்பி வந்த அருண்குமார், கையில் எடுத்து வந்த இரண்டு பெட்ரோல் குண்டுகள் மற்றும் நாட்டு வெடியை அடுத்தடுத்து கடைக்குள் வீசினார்.அவை கடையில் விழுந்து வெடிக்க, தீப்பிடித்து கடை எரிய துவங்கியது. அப்பகுதியே புகைமூட்டமானது. கடையில் இருந்த ஷேக் அலாவுதீன், தலைதெறிக்க ஓடி, அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்தார். தீயில் கடையிலிருந்த மொபைல் போன்கள், உபகரணங்கள் எரிந்து நாசமாகின.விழுப்புரம் கூடுதல் எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கடையில் வெடிக்காமல் கிடந்த ஒரு பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அடிதடி வழக்குகளில் தொடர்புடைய அருண்குமார், போதையில் அங்குள்ள கடைகளில் அடிக்கடி தகராறு செய்வதும், மாமூல் வாங்குவதும், தெரியவந்தது. இந்த வகையில் தான் மொபைல் போன் கடையிலும் பெட்ரோல் குண்டை அவர் வீசியுள்ளார். தனிப்படை போலீசார், அப்பகுதியில் போதையில் மட்டையாகி இருந்த அருண்குமாரை, இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர்.