உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பாரிஸ் லுாவ் அருங்காட்சியகத்தில் 7 நிமிடத்தில் நகைகள் கொள்ளை

பாரிஸ் லுாவ் அருங்காட்சியகத்தில் 7 நிமிடத்தில் நகைகள் கொள்ளை

பாரிஸ்: பிரான்சில் உள்ள பாரிஸ் லுாவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்சின் தலைநகர் பாரிசில் பிரபலமான லுாவ் அருங்காட்சியகம் உள்ளது. தினமும், 30,000க்கும் மேற்பட்டோர் பார்வையிடும் இந்த அருங்காட்சியகத்தில் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம், நெப்போலியன் கால நகைகள், பழமையான சிற்பங்கள் என ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சியகத்தில் உள்ள, 'அப்பல்லோ கேலரி'யில் பிரான்ஸ் அரசர்கள் மற்றும் அரசிகளின் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் நேற்று வந்த மர்ம நபர்கள் பக்கத்து கட்டடத்தில் இருந்து, 'ஹைட்ராலிக்' ஏணி உதவியுடன் அருங்காட்சியகம் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், கண்ணாடியை இயந்திரத்தால் உடைத்து கேலரிக்குள் புகுந்துள்ளனர். அங்கிருந்த மாவீரன் நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த அரசன் மற்றும் அரசியின் விலைமதிப்பற்ற ஒன்பது நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம், ஏழு நிமிடங்களில் நடந்துள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரென் நுன்சே உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று முழுதும் அருங்காட்சியகம் மூடப்பட்டது. கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை