UPDATED : செப் 16, 2026 02:43 PM | ADDED : செப் 15, 2026 09:14 PM
கோவை: இந்தியாவிலேயே முதன்முதலில் பொது நிகழ்ச்சிகளுக்கு ரோபோக்களை வாடகைக்கு வழங்கி வருகிறது ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனம். ஆர்.எஸ்.புரம் சென்றால் இந்த ரோபோக்களை காணலாம். மக்களுடன் உரையாடுவது, கை கொடுப்பது, வியாபாரியிடம் பூ வாங்குவது போன்ற செயல்பாடுகளால் கெவின் என்ற இந்த ரோபோ மக்களை கவர்ந்து வருகிறது. “இந்த ரோபோக்களை சாமானிய மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் லட்சியம்” என்கிறார், ரோபோ மிராக்கிள் நிறுவனத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்த மதன். அவர் மேலும் கூறியதாவது: 2023-ம் ஆண்டு முதல் முறையாக ரோபோக்களை கோவைக்கு கொண்டு வந்தோம். அப்போது 'நிலா' என்ற ரோபோவை உருவாக்கினோம். இது விழாக்களுக்கு வரவேற்பு ரோபோவாக பயன்படுத்தப்பட்டது. நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, பரிமாறும் ரோபோ, நாய் ரோபோ, ஹியூமனாய்டு ரோபோ மற்றும் கிட்ஸ் ஸ்டார் உள்ளிட்ட ஐந்து வகை ரோபோக்களை வாடகைக்கு வழங்கி வருகிறோம். இவை மக்களிடம் பேசுகின்றன; நடனமாடுகின்றன. வரவேற்பு ரோபோ, நிகழ்ச்சிக்கு வரும் மக்களை வரவேற்று, மிட்டாய் வழங்குகிறது, உணவு பரிமாறுகிறது, புகைப்படம் எடுத்து, அதை உடனடியாக பிரிண்ட் செய்து வழங்குகிறது. விருந்துகளில் உணவு பரிமாற பயன்படுத்தலாம். சிறிய ரோபோக்களான 'கிட்ஸ் ஸ்டார்' நடனமாடி குழந்தைகளை கவர்கின்றன. சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில், கெவின் என்ற ரோபோ பங்கேற்றது. இவ்வாறு, அவர் கூறினார்.