| ADDED : அக் 09, 2024 04:46 AM
சென்னை: கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் அசாருதீன், 34. இவரது சகோதரர் முகமது உசேன், 28. இருவரும், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர், அசாருதீன் கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, 1 ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டுள்ளார்.அப்போது, 1 ரூபாய்க்கு பாக்கெட் இல்லை, 5 ரூபாய் ஊறுகாய் பாக்கெட் மட்டுமே உள்ளதாக, அசாருதீன் கூறியுள்ளார். இதனால், வினோத் - அசாருதீன் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்ற வினோத், 30, தன் நண்பர்கள் கலையரசன், 32, மற்றும் இரண்டு பேரை அழைத்து வந்து, அசாருதீனுடன் அடிதடியில் ஈடுபட்டுள்ளார்; மளிகை கடையையும் அடித்து உடைத்துள்ளார்.சிறிய கத்தியால் அசாருதீன் தலையில் குத்தி, நால்வரும் தப்பிச் சென்றனர். அரசு மருத்துவமனையில் அசாருதீன் அனுமதிக்கப்பட்டு, தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து, போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரித்தனர். அவர்கள், புகார் தேவையில்லை சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்துச் சென்றனர்.