அரசு பஸ்சில் தவறவிட்ட தங்க சங்கிலி: போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்
வால்பாறை: அரசு பஸ்சில் பயணியர் தவறவிட்ட தங்கச்சங்கிலியை, நகராட்சி ஊழியர் மீட்டு போலீசில் ஒப்படைத்தார். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், நாள் தோறும் பழநிக்கு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன் தினம் பழநியிலிருந்து வால்பாறைக்கு பஸ் இயக்கப்பட்டது. அப்போது அந்த பஸ்சில், நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த தமிழ்அழகன் என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்தார். வால்பாறை நகருக்கு வந்த பஸ்சை விட்டு இறங்கும் போது, குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வால்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனிடையே காணாமல் போன தங்க சங்கிலியை, அதே பஸ்சில் பயணம் செய்த வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் கலீல்ரகுமான், பஸ்சிலிருந்து கிழே இறங்கும் போது, அதை கண்டார். பின்னர் வால்பாறை போலீசில் அந்த தங்க சங்கிலியை ஒப்படைத்தார். இதனையடுத்து, தமிழ்அழகனை போலீசார் வரவழைத்து, தவறவிட்ட தங்க சங்கிலியை நேரில் வழங்கினர். அதன் பின் பஸ்சில் பயணியர் தவறவிட்ட தங்க சங்கிலியை நேர்மை தவறாமல் போலீசிடம் வழங்கிய, நகராட்சி ஊழியர் கலீல்ரகுமானை, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பாராட்டினார்.