ராய்ச்சூர்:கர்நாடகாவில் 60 வயது மூதாட்டி, தான் பிச்சை எடுத்துச் சேர்த்த 1.83 லட்சம் ரூபாயை, ஆஞ்சநேயர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். ஆந்திராவை சேர்ந்தவர் ரங்கம்மா, 60. இவர், 40 ஆண்டுகளுக்கு முன், கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், பிஜனகெரா கிராமத்திற்கு வந்தார். அங்கு பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து, ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அப்பணத்தில், அக்கிராமத்தினரே சிறிய ஷெட் வீடு கட்டிக் கொடுத்தனர். பண்டிகை நாட்களில் ரங்கம்மாவுக்கு சேலைகளும், உணவும் வழங்கினர். தினமும் பிச்சை எடுக்கும் பணத்தில் வாழ்ந்து வந்தார். ஆட்டோ ஓட்டுநர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் மட்டுமே பணம் வாங்குவார். இவரிடம் பணம் கொடுத்துச் சென்றால், அன்றைய தினம் மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதாக நம்புகின்றனர். சில நாட்களுக்கு முன், அவரின் ஷெட்டில் பிளாஸ்டிக் பையில் பணம் இருப்பதை கிராமத்தினர் பார்த்தனர். மூதாட்டியிடம் கேட்டதற்கு, 'ஆறு ஆண்டுகளாக பிச்சை எடுக்கும் பணத்தில் சிறுக சிறுக சேர்த்து வைத்துள்ளேன்' என தெரிவித்தார். 'இந்த பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று கிராமத்தினர் கேட்டதற்கு, இங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிக்கு வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து கிராமத் தினர், மூதாட்டியின் ஷெட்டில் இருந்த மூன்று பிளாஸ்டிக் பைகளை திறந்தனர். அதில், 10, 20, 100 ரூபாய் நோட்டுகள், 1, 2, 5 ரூபாய் நாணயங்களும் இருந்தன. அதை எண்ணிய போது, 1.83 லட்சம் ரூபாய் இருந்தது. இது தவிர, 20,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள், மோசமான நிலையில் இருந்தன. சில நாட்களுக்கு பின், பணத்தை கோவில் பொறுப்பாளர்களிடம் வழங்கினார். மூதாட்டியின் துாய்மையான மனதை எண்ணி கிராமத்தினர் பாராட்டினர். ரங்கம்மாவை, கிராமத்தினர் கவுரவித்தனர்.