UPDATED : மே 09, 2025 04:03 AM | ADDED : மே 09, 2025 04:02 AM
ரிஷிகேஷ் : உத்தரகண்டில், ரயிலில் பயணி வாங்கிய தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து, அவரது இருக்கைக்கே சென்று ரயில் பான்ட்ரி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஷால் சர்மா என்ற, 'யு டியூபர்' உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து காஷ்மீரின் வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு ஹேம் குண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 3ம் வகுப்பு ஏ.சி., பெட்டியில் கடந்த 6ம் தேதி பயணித்தார். அப்போது பான்ட்ரி ஊழியரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கினார். 15 ரூபாய் விலையுள்ள அதை, 20 ரூபாய்க்கு ஊழியர் விற்றார். இதையடுத்து கூடுதல் விலைக்கு தண்ணீரை விற்றது குறித்து, ரயில்வே நிர்வாகத்துக்கு ஆன்லைனில் விஷால் புகார் அளித்தார். மேலும், தன் யு டியூப் சேனலிலும் இதுகுறித்து பதிவிட்டார்.அடுத்த சில நிமிடங்களில் விஷால் இருந்த பெட்டிக்கு, சீருடை அணிந்த பான்ட்ரி ஊழியர்கள் வந்து படுக்கையை விட்டு கீழே இறங்கும்படி மிரட்டினர்.அவர் இறங்க மறுத்ததால் மேலே ஏறி விஷாலை சரமாரியாக தாக்கினர். இதில், விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த சட்டையும் கிழிந்தது. இதையடுத்து சமூக வலைதளத்திலும், யு டியூபிலும் ரயில்வே நிர்வாகம் கவனத்துக்கு என, தன்னை தாக்கியது குறித்து விஷால் பதிவிட்டிருந்தார்.இதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாகம், புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடப்பதாகவும், கேன்டீன் நிர்வாகத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.