UPDATED : ஜன 24, 2025 04:35 AM | ADDED : ஜன 24, 2025 01:46 AM
பெங்களூரு : கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருதை வாங்க பிரபல நடிகர் சுதீப் மறுத்து விட்டார்.கர்நாடக அரசு, 2019ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை, நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் சிறந்த நடிகராக, கிச்சா சுதீப், நடிகையாக அனுபமா கவுடா உட்பட 25 பிரிவுகளில் விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நடிகர் சுதீப் தன், 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: மதிப்பிற்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் மன்ற உறுப்பினர்களே... சிறந்த நடிகர் பிரிவின் கீழ், மாநில விருதை பெற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். மேலும், இந்த கவுரவத்துக்காக மரியாதைக்குரிய நடுவர் மன்றத்துக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இருப்பினும், பல ஆண்டுகளாக, விருதுகள் பெறுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குள்ள பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் எடுத்த இம்முடிவை ஆதரிக்க வேண்டுகிறேன்.கன்னட திரைத்துறையில் பல்வேறு திறமையான நடிகர்கள் உள்ளனர். என்னைவிட, அவர்களுக்கு வழங்குவது சாலச்சிறந்தது. அவர்களில் ஒருவர் இந்த விருது வாங்குவதை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை தரும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற என் அர்ப்பணிப்பு, எப்போதுமே விருதை நோக்கி இருந்ததில்லை.என்ன தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என் முடிவு வருத்தத்தை ஏற்படுத்தினால், மாநில அரசிடமும், நடுவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.