ராமேஸ்வரம் டூ குஜராத் வரை 36 ஆட்டோக்களில் பயணம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்: ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிதி திரட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முதல் குஜராத் வரை 36 ஆட்டோக்களில் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.பிரிட்டன் லண்டனில் உள்ள சிசுகுஞ்ச் சேவை அறக்கட்டளையில் இந்தியா உள்ளிட்ட 155 நாடுகளை சேர்ந்த 2000த்திற்கும் மேலான சமூக ஆர்வலர்கள் உள்ளனர். இந்த அறக்கட்டளை மூலம் இந்தியாவில் 600 ஏழை குழந்தைகள் உள்ளிட்ட உலகளவில் 5000 குழந்தைகளுக்கு கல்வி நிதி வழங்குகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் பள்ளி கட்டடம் அமைக்க நிதி திரட்டுகின்றனர்.இதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 36 ஆட்டோக்களில் 180 சமூக ஆர்வலர்கள் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு விழிப்புணர்வு பயணத்தை துவக்கினர். இவர்கள் ஸ்ரீரங்கம், சென்னை, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா வழியாக டிச.,25ல் குஜராத் செல்ல உள்ளனர்.இதுகுறித்து சிசுகுஞ்ச் அறக்கட்டளை இயக்குநர் காயத்ரி கூறியதாவது : ஏழை குழந்தைகள் கல்விக்காக 155 நாடுகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் இந்தப் பயணத்தை துவக்கி உள்ளோம். வழியில் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து நிதி திரட்டுவோம். இறுதியாக குஜராத்தில் 36 ஆட்டோக்களை விற்ற பணத்தையும் பள்ளி கட்டுமானத்திற்கு பயன்படுத்த உள்ளோம் என்றார்.