உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பழமையான ஓலைச் சுவடிகளை பாதுகாக்கும் கிராம மக்கள்

பழமையான ஓலைச் சுவடிகளை பாதுகாக்கும் கிராம மக்கள்

புதுக்கோட்டை; திருமயம் அருகே, சிலர், வீடுகளில் ஒலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து, பராமரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நச்சாந்துபட்டி, குழிப்பிறை போன்ற ஊர்களில் உள்ள சிலர், கம்பராமாயணம், மகாபாரதம், மருத்துவக் குறிப்புகள் மற்றும் வரலாற்று தகவல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை, பத்திரப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, குழிப்பிறையை சேர்ந்த இளங்கோ கூறுகையில், ''நகரத்தார் வீடுகளில் இருக்கும் பழமையான பொருட்களுடன், பனை ஓலைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள், கணக்குகள், மருத்துவக் குறிப்புகளையும் வைத்திருப்பர். முன்னோர்கள் தொழில் செய்த இடங்கள், கோவிலுக்கு கொடுத்த நன்கொடை, கப்பல் போக்குவரத்து செலவு போன்றவை அடங்கிய ஓலைச்சுவடிளும் இருக்கும். என்னிடம் உள்ள, 2,000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை, தமிழக சுவடிகள் பாதுகாப்பு குழுமம் உதவியுடன் பாதுகாத்து வருகிறேன்,'' என்றார். செந்தில்வேல் என்பவரது வீட்டில் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வருகின்றனர். தமிழக சுவடிகள் பாதுகாப்பு குழுமம் பணியாளர் சண்முகம் கூறுகையில், ''தமிழகத்தில், ஓலைச்சுவடிகள் யார் வைத்திருந்தாலும், நாங்கள் நேரடியாக சென்று முற்றிலும் இலவசமாக, ஓலைச்சுவடிகள் மீது லெமன் கிராஸ் ஆயில் பூசி, பாதுகாப்பாக இருக்க உதவி செய்து வருகிறோம். அவற்றை போட்டோ எடுத்து, டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வருகிறோம். பொதுமக்கள் பழமையான ஓலைச்சுவடிகளை பாதுகாக்க முன் வர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை