எஸ்.நாங்கூர் ஈஸ்வரன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு சுதந்திரம் அடைந்தவுடன் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை, ஹிந்தியை உலக அரங்கில் இந்தியாவின் மொழி அடையாளமாகவும், தேசத்தின் ஆட்சி மொழியாகவும் அறிவித்து, அதன்படி, நாட்டை ஆண்டது காங்கிரஸ் கட்சி. தேசத்தில் எங்கும் எதிர்ப்பு இல்லை; ஆனால், தி.மு.க., மட்டும் ஹிந்தி எதிர்ப்பு என, அரசியலுக்காக மாணவர்களை துாண்டி விட்டு போராட்டம் நடத்தியது; இதில், பலர் உயிர் நீத்தனர். அப்போது பிரதமராக இருந்த நேரு, 'ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஏற்கும் வரை, இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தியுடன், ஆங்கிலமும் நீடிக்கும்' என்று, உறுதிமொழி தந்தார்.அதேநேரம், பிரதமர் வி.பி.சிங் முதல் மன்மோகன் சிங் ஆட்சிகாலம் வரை தி.மு.க., மத்திய அரசில் அங்கம் வகித்தது; தி.மு.க.,வினர் பல முக்கிய துறைகளில் அமைச்சர்களாக இருந்தனர். அப்போதெல்லாம் நேருவின் உறுதிமொழியை சட்டமாக்க குரல் கொடுக்கவும் இல்லை; அதை வலியுறுத்தவும் இல்லை.இதுகுறித்து, தி.மு.க., ஆட்சியாளர்களிடம் கேட்டால் பதில் இருக்காது. தற்போது, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, கருப்பு பணம், வன்முறைகள், போதை பொருட்கள் கடத்தல் என, சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ள நிலையில், அதை திசை திருப்ப, திடீரென கல்வி, மொழி, நிதி என, நாடக பாணியில் குரல் எழுப்புகிறது, தி.மு.க.,அதிகாரத்திற்கு வருவதற்காக இப்படி யெல்லாம் நாடகம் ஆடுவது தி.மு.க., வினருக்கு கைவந்த கலை. 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு என, வீர வசனம் பேசுவர். ஆட்சிக்கு வந்ததும், அத்தனையும் மறந்து, நிதி வரும் திட்டங்கள் தீட்டி தங்கள் நிதி நிலையை உயர்த்துவர். இப்படித்தான், கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்த, சென்னைக்கு வீராணம் நீர், சேது சமுத்திர திட்டம் என, இவர்கள் உண்டு கொழுக்கவே, பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடி ரூபாய் வீணானது. தற்போது, கடந்த தேர்தலில் கொடுத்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் மற்றும் இன்னபிற கபட நாடகங்களிலிருந்து மக்களை திசை திருப்பவே, இந்த தமிழ் மொழி கோஷம்! கூட்டணி தர்மம் என கூறிக் கொண்டு மூன்று ஜால்ரா பொம்மைகள் உள்ளன. இந்த பொம்மைகள், ஆட்சியாளர்கள் என்ன சொன்னாலும், செய்தாலும், ஜால்ரா போடுவதுதான் இவற்றின் வேலை!தான், தன் மனைவி, துணைவி, வாரிசுகள், பினாமிகள், லஞ்சம் தருவோர், துதிபாடிகள், அடியாட்கள் என எட்டு பேர் நலனுக்காக மட்டுமே அரசியல் என ஆகிவிட்டதை, மக்கள் உணராத வரை தமிழகம், அனைத்து துறைகளிலும் முன்னேறுவது கடினமே!lll ஓரங்க நாடகத்தை நிறுத்துங்கள்!
பா.சு.மணிவண்ணன்,
வழக்கறிஞர், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: 'நீதிபதிகள் நியமனத்தில்
இடஒதுக்கீட்டை அமல்படுத்தி அதன்படி, உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற
நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும்' என, தனிநபர் மசோதாவை பார்லிமென்டில்
தாக்கல் செய்துள்ளார், தி.மு.க., - எம்.பி., வில்சன்.இந்தியா
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே, ஜாதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்
கூடாது என்பதில் உறுதியாக உள்ளது, அரசு. ஜாதி அடிப்படையில் நீதிபதிகள்
நியமனம் நடைபெற ஆரம்பித்து விட்டால், வழங்கப்படும் தீர்ப்புகளுக்கும் ஜாதி
சாயம் பூசப்பட்டு விமர்சிக்கப்படும் என்பதால், நீதிபதிகள் நியமனம் ஜாதி
அடிப்படையில் இதுவரை நடைபெறவில்லை.அத்துடன், உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என்பது, பல படிநிலைகளை கடந்து செயல்படுத்தப்படுவது!நீதிபதிகள்
அடங்கிய கொலீஜியம் அமைப்பு, பலதரப்பட்ட தரவுகளை பரிசீலனை செய்து, அனைத்து
வகை தகுதிகளையும் அலசி ஆராய்ந்து, சீர்துாக்கி பார்த்து தான், நீதிபதிகளின்
பெயரை பரிந்துரைக்கும்.அரசு, அவர்கள் குறித்து ஆலோசனை செய்து
பெயர்களை அறிவிக்கும். சிலரை ஏற்காமலும், சிலரது முந்தைய செயல்பாடுகளில்
விளக்கம் கேட்டும் திருப்பி அனுப்பும். அதை, கொலீஜியம் பரிசீலனை செய்து
மீண்டும் அனுப்பி வைக்கும். அதன்பின்தான் உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற
நீதிபதிகள் நியமன அறிவிப்பு வெளியாகும்.இதுதான் நடைமுறை!நீதிபதிகள்
நியமனத்தில் இட ஒதுக்கீடு கேட்டுள்ள வில்சன், தான் சார்ந்த கட்சியின்
நியமன பதவிகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என்பதை விளக்க வேண்டும்.தி.மு.க.,வின்
மற்ற அமைப்புகளை விடுங்கள்... அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள்
நியமனத்தில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்கலாம் அல்லவா?குறைந்தபட்சம், தலித்களுக்காவது 18 சதவீதம் பதவிகளை வழங்கி இருக்கலாமே... தி.மு.க., ஆட்சி அமைந்த பின் இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது; தொடர்ந்தும் நடைபெறுகிறது. சமீபத்தில், மதுரை உயர் நீதிமன்றத்திற்கு, 39 அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், இட ஒதுக்கீடு அமல்படுத்தி இருக்கலாமே!உச்ச
நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதிட வழக்கறிஞர்கள்
நியமிக்கப்பட்டபோது, சமூகநீதியை கடைப்பிடித்து, இட ஒதுக்கீடு
செய்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை?தங்களால் செய்ய முடிந்ததை
செய்யாமல் இருப்பதும்; செய்ய முடியாததை, 'செய்து கொடுங்கள்' என்றும்
கேட்கும் ஓரங்க நாடகத்தை தி.மு.க.,வினர் என்று தான் நிறுத்துவரோ!lll முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்!
ப.
ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நுாறு
நாள் வேலை திட்டம், ஊழல் திட்டமாக மாறி வருவதாகவும், 14 கோடி ரூபாய்
கையாடல் நடந்திருப்பதாகவும் சமூக தணிக்கையில் தெரிய வந்துள்ளதாக பா.ம.க.,
நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தும் விதமாக, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை
உறுதி செய்யும் இத்திட்டம், இன்றைய ஆட்சியாளர்களால் ஊழல் திட்டமாக
மாறியுள்ளது. பல இடங்களில், 100 நாள் வேலை திட்டத்திற்கு வருவோர்,
'நானும் வேலை செய்தேன்' என்பது போல ஒரு மணி நேரம் வேலை செய்து விட்டு,
எங்காவது மரத்தடி பார்த்து உட்கார்ந்து விடுகின்றனர். இன்னும்
சிலர் வேலைக்கு போகாமலேயே ஊதியம் பெறுவதும் நிகழ்கிறது. என் நண்பரின்
வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண் கூட அப்படித்தான்... 100 நாள் வேலை
திட்டத்திற்கு தலையை காட்டி விட்டு நண்பரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து
விடுவார். இந்த முறைகேடுக்கு என்ன காரணம்?கிராமப்புற ஏழை
மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, முறைப்படுத்தவோ,
சிறப்பாக செயல்படுத்தவோ தமிழக அரசு எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. இதனால், ஊராட்சி தலைவர்கள், பொய் கணக்கு காட்டி கொள்ளைஅடிக்கின்றனர். கிராம
பஞ்சாயத்துக்களில்,பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் இதை கொள்ளையடிக்கும்
திட்டமாக பயன்படுத்தி வருவதாக, ஐகோர்ட் மதுரை கிளை ஏற்கனவே தெரிவித்து
உள்ளது. இனியும், ஊழல் பெருச்சாளிகளுக்கு தீனி போடாமல், 100 நாள்
வேலை திட்டத்தை முறைப்படுத்தி, கிராமப்புற வளர்ச்சிக்கு பயன்படுத்த
வேண்டும்!அரசு செய்யுமா? lll