உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அரசியல் மேடையல்ல பார்லிமென்ட்!

அரசியல் மேடையல்ல பார்லிமென்ட்!

எஸ்.உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பதவியேற்ற பின், பார்லி.,யின் இரு சபைகளும் முதன்முறையாகக் கூடின.சென்ற முறையை விட கூடுதல் இடங்களைப் பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின், எதிர்க்கட்சித் தலைவர் தகுதியைப் பெற்ற ராகுலும், கூட்டணிக் கட்சிகளும், முதல் நாளிலிருந்தே சபையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதைப் பார்த்து, நாடே அதிர்ந்தது.அதிலும் ராகுல், முழுக்க முழுக்க பிரதமரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை கிண்டல் செய்தது, 'மோடியை ராமர் கை கழுவி விட்டார்... தெய்வப் பிறவியை தேர்தல் காப்பாற்றவில்லை... பா.ஜ.,வினர் இந்துக்களே இல்லை' என, மிகவும் ஆவேசமாகப் பேசியது, தேய்ந்து போன ரிக்கார்டு போல், பா.ஜ., மீது பழைய குற்றச்சாட்டுக்களையே அடுக்கியது ஆகிய வற்றைப் பார்த்தால், அவர் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பது போல் தெரிந்தது.அதற்கு பதில் தரும் வகையில், பிரதமர் மோடியும், '500க்கு 99 பாஸ் மார்க் அல்ல' என்று குத்திக் காட்டியது ரசிக்கும்படி இருந்தாலும், எமர்ஜென்ஸி குறித்து காங்கிரசை சீண்டும் வகையில் கருத்தைக் கூறியதும், ஜனாதிபதி தன் உரையில், இந்திராவின் அவசரநிலை குறித்துப் பேசியதும், ரசிக்கும்படியாக இல்லை. பிரதமரும் ஏன் பழைய கதைகளையே பேசுகிறார் என்று கேட்கத் தோன்றியது.ராகுலின் சில நடவடிக்கைகளை, பிரதமர் மோடி, கிண்டல் தொனியில் குத்திக் காட்டியதையும், 'எந்த காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது' என சாபமிட்டதையும் பார்த்தபோது, அவரும் தேர்தல் ஜுரத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்பதைக் காட்டியது. 'நீட்' தேர்வு, பொது சிவில் சட்டம், தேர்தல் நிதிப் பத்திரம், ஜம்மு காஷ்மீர் என, பரபரப்பாக நிறைய விஷயங்கள் குறித்து பேசுவர் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த நேரத்தில், இருவரும் குழாயடி சண்டை போட்டதைக் கண்டபோது, நம் மொத்த பணமும் வீணாகிவிட்டதே என்ற கவலையே மிஞ்சியது.பார்லிமென்ட் என்பது மக்களின் மனசாட்சி. மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய, தெய்வீக இடம் அது. அதை பிரசார மேடையாக்க வேண்டாம், ப்ளீஸ்!

எம்.ஜி.ஆரை பின்பற்றுங்கள் பழனிசாமி!

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறது என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்காக இவர் சொல்லும் காரணம், 2009-ல் நடந்த இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்தார் என்பது தான். இடைத் தேர்தலை, ஜெயலலிதா புறக்கணித்தார்; ஆனால் எம்.ஜி.ஆர்., இடைத்தேர்தலை புறக்கணிக்காமல், தன் எதிரி அணியை ஆதரித்தார்; அதுதான் அவரது அரசியல் ராஜதந்திரம். எம்.ஜி.ஆருக்கு, எப்போதும் ஒரு பாலிசி உண்டு. மத்தியில் யார் ஆட்சி செய்தாலும், அவர்களுடன் மோதல் போக்கு இல்லாமல், இணக்கமான சூழ்நிலையைத் தான் உருவாக்குவார். 'மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணியே இல்லாவிட்டாலும், அரசு ரீதியாக இணக்கம் வேண்டும்; அப்போது தான் மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்' என்பார்.கடந்த, 1979-ல் மொரார்ஜி தேசாய் பிரதமர்ஆனதற்கு ஆதரவு தெரிவித்தார்; பின், சரண்சிங் பிரதமர் ஆனதற்கு ஆதரவு தெரிவித்தார். அதன் வாயிலாக,அ.தி.மு.க.,வை சேர்ந்த சத்தியவாணி முத்து, பாலாபழனுார் ஆகியோரை, மத்தியமைச்சர் ஆக்கினார். திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் முதன் முதலாக மத்தியமைச்சரானது அப்போது தான். கடந்த, 1982ல் பிரதமராக இந்திராவும், தமிழக முதல்வராக, அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரும், பதவியில் இருந்த சமயம், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று இருந்தது. அப்போது, ராமநாதபுரம் - திருப்பத்துார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வால்மீகி காலமானார். அதற்காக அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாமல், காங்கிரஸ் வேட்பாளர் அருணகிரிக்கு, தானாக முன்வந்து ஆதரவு தந்தார் எம்.ஜி.ஆர்., தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு, அ.தி.மு.க.,வும் ஆதரவு என்ற எம்.ஜி.ஆரின் அதிரடி அறிவிப்பு, தமிழக அரசியலை தலைகீழாக மாற்றி, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அருணகிரி அமோக வெற்றிப் பெற்றார்.அதன்பின், 1983-ல், இந்திரா எம்.ஜி.ஆருடன் கூட்டணி அமைத்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து, தி.மு.க., 'கழற்றி' விடப்பட்டது. இதுதான் எம்.ஜி.ஆரின் அரசியல் ராஜதந்திரம்.கடந்த, 1980-ல், தன் ஆட்சியை கலைத்ததை கூட புறந்தள்ளி, இந்திராவுடன் கூட்டணி அமைத்ததே, மாநில நலனுக்காக தான். மத்திய அரசிடம் இருந்து உணவுப் பொருட்களை, தாராளமாக பெற்று வந்தார்; ரேஷன் கடைகளில் பொருட்கள் நிரம்பி வழிந்தன; இல்லை என்ற சொல்லே அவரது ஆட்சியில் இல்லாமல் இருந்தது. கடந்த, 1984ல் இந்திரா மறைவுக்கு பின் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது; ராஜிவ் பிரதமர்ஆனார்; லோக்சபா துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மு.தம்பிதுரைக்கு வழங்கப்பட்டது. மத்தியில், ஆளும் கட்சிக்கு தான், அ.தி.மு.க.,வின் ஆதரவு என்ற நிலைப்பாட்டை, எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தி வைத்திருந்தார். அவர் வழிகாட்டுதலின்படி தான் பழனிசாமி செயல்படவேண்டும். அதன்படியே அ.தி.மு.க.,வை வழிநடத்த வேண்டும்; அப்போதுதான் தோல்வியே இல்லாத அ.தி.மு.க.,வை காணமுடியும்.குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும், ப.சிதம்பரம், ஆர்.எஸ்.பாரதி போன்றோர் செய்யும் வீண் விமர்சனங்களை, பழனிசாமி துாக்கி எறிய வேண்டும். எனவே, 2009-ல் ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல, விக்கிரவாண்டி தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கக் கூடாது; அது தவறு.கடந்த, 1982-ல் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்த எம்.ஜி.ஆரை போலவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ஜ., கூட்டணி பா.ம.க.,வேட்பாளரை, அ.தி.மு.க., ஆதரவு அளிக்க வேண்டும். அந்த ஆதரவு, அ.தி.மு.க., வின் வருங்கால வெற்றிக்கு வழிவகுக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஜூலை 07, 2024 17:09

ஹத்ராஸ் மரணங்கள், தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், கொலைகள் , பற்றி எரியும் மணிப்பூர், என்று தலைவிரித்தாடும் பிரச்னைகள் இவற்றைக் கிளப்பி சங்கடம் ஏற்படுத்தாமல், பூர்வ கதைகளையே கிண்டி பொழுது போக்கி விடலாம் என்ற தந்திரமாகவும் இருக்கலாம்


Anantharaman Srinivasan
ஜூலை 07, 2024 12:51

எஸ். உதயம் ராமின் கடிதம் இருகட்சி தலைவர்களின் அணுகுமுறையும் மாறவேண்டும் என்பதை வலியுறுத்திகிறது. சரியான எடுத்துக்காட்டு.


சோழநாடன்
ஜூலை 07, 2024 12:35

2004-14காங்கிரஸ் ஒன்றிய அரசின் ஆட்சியில் இருந்தபோது மறைந்த அருண் ஜெட்லியும், சுஸ்மா சுவராஜ் இருவரும் இணைந்து பல கூட்டத் தொடர்களை நடத்தவிடாமல் கூச்சல், குழப்பம், குழாயடி சண்டைகள், சாக்கடை நாற்றமெடுக்கும் பேச்சு இவற்றை மக்களவையில் நிறைவேற்றியவர்கள் பாஜக கட்சியைச் சார்ந்தவர்கள்தான். இராகுல்காந்தி பேசினால் மட்டும் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டுப்போய்விட்டது என்று புலம்புவதில் பொதுமக்களுக்கும் பாஜகவுக்கும் எந்த யோக்கிதையும் இல்லை.


S.kausalya
ஜூலை 07, 2024 15:14

பொது மக்களுக்கு ஏன் யோக்கியதை இல்லை.


c.k.sundar rao
ஜூலை 07, 2024 11:15

EPS should act like a statesman, instead his actions are like ordinary politicians.


Dharmavaan
ஜூலை 07, 2024 08:13

நம் தலைவிதி ராகுல் போன்ற நான்காம் தர அரசியல்வாதி பாராளுமன்றம் போவது பொருக்கி ரவ்டிகள் போல் கூச்சல் போடுவது ரவுடித்தனம் செய்வதற்கு பாராளுமன்றம் இல்லை.


Dharmavaan
ஜூலை 07, 2024 08:11

ராகுல் பேச்சை முதலில் விமர்சித்துவிட்டு பிறகு மோடி பதில் பற்றி பேசுவது அறிவுள்ள செயல். எதிர்வினை வினைக்கு ஏற்ப இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை