ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையிலிருந்து அனுப்பிய. 'இ - மெயில்' கடிதம்: நாட்டில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உருவாக்கப்பட்டது தான் காவல்துறை. ஆனால், தமிழகத்தில் கொலை, கஞ்சா கடத்தல் செய்திகள் வெளிவராத நாட்களே இல்லை. தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி, ஏதோ வி.ஐ.பி.,க்களை தர வரிசைப்படுத்துவதுபோல 4,000 ரவுடிகளை ஏ,பி,சி என தரம்பிரித்து பட்டியலிடுகிறார். 'சென்னையில் கடந்தாண்டு, 63 கொலைகள் நடந்திருக்கின்றன; அதுவே, இந்த ஆண்டு 58 ஆக குறைந்திருக்கிறது' என, அந்த அதிகாரி பெருமையோடு கூறியிருக்கிறார். சென்னையில் இரவு, பகலாக பணியாற்றிவரும் 10,000 போலீசாரால், ஐந்து கொலைகள் குறைந்திருக்கின்றன என்று கூறுவது, அவமானமாக தெரியவில்லையா? தமிழக அரசியலில் காமராஜர், ஓமந்துாரார் போன்ற தலைவர்கள் முதல்வர் பதவியில் இருந்த காலத்தில், லண்டன் காவல்துறையின் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் பேசப்பட்டது, தமிழக காவல்துறை. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, ஒரு முறை அவரது டிரைவர் ஒருவழிப்பாதையில் காரை செலுத்த முயன்றார். அந்த சாலையில் பணியிலிருந்த போலீஸ்காரர் காரை மறித்து, 'இது ஒருவழிப்பாதை; இந்த வழியாக செல்ல அனுமதி இல்லை' என்று தடுத்திருக்கிறார். முதல்வர் அந்த போலீஸ்காரரிடம், 'நான் யார் தெரியுமா?' என்று கேட்க, அந்த போலீஸ்காரர் 'மன்னிக்கவும் நீங்கள் யாரென்று தெரிந்து தான் கூறுகிறேன்; சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது' என்று கூறியிருக்கிறார். டிரைவரிடம் காரை திருப்பச் சொன்ன முதல்வர், மறுநாளே அந்த போலீஸ்காரரை வரவழைத்து பாராட்டி, பதவி உயர்வும் வழங்கியிருக்கிறார். இந்த காலத்தில், இது போன்ற நேர்மை யான ஆட்சியாளர்களையும், துணிச்சலான அதிகாரிகளையும் தமிழகத்தில் பார்க்க முடியுமா? அன்று போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடந்துகொண்டனர். அரசியல் பின்புலம் இல்லாமல், 4,000 ரவுடிகள் தைரியமாக நடமாட முடியாது என்பது உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அரசியல்வாதிகளை மீறி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத வகையில், அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் -- ஒழுங்கு சீர்குலையும்போது முக்கியமான பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகளை இடம் மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா? அவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் தான், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முடியும் முதல்வரே! செங்கோல் பற்றி அறியாத மதுரைக்காரர்!
முனைவர்
மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'நாணமுன்னு வெட்க முன்னு நாலு வகை சொல்வாங்க; நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு
நாட்டுக்குள்ளே இருக்குதுங்க' என, 60 ஆண்டுகளுக்கு முன், சகோதரி என்ற
படத்தில் சந்திரபாபு பாடிய பாடல் ஒன்று உண்டு.அந்த வகையறாவைச்
சேர்ந்து விட்டாரோ, சு.வெங்கடேசன் என்ற மதுரை தொகுதி எம்.பி., என்று
கேட்கத் தோன்றுகிறது. இந்த வகையில், ஆர்.எஸ்.பாரதியும் உண்டு.முற்போக்கு
சிந்தனையாளர் என்ற பெயரில், பிற்போக்கு சிந்தனைகளோடு வலம் வரும்
வெங்கடேசன், தன்னை இலக்கியவாதியாகக் காட்டிக் கொள்ள, 'காவல் கோட்டம்' என்ற
நாவல் எழுதி, சாகித்ய அகாடமி விருதும் பெற்றவர். கம்யூனிஸ்ட் கொள்கையால்
ஈர்க்கப்பட்டு, அரசியலில் நுழைந்தவர். எதனால் கவரப்பட்டு
கம்யூனிசத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஊழலில் ஊறித் திளைக்கும்
தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தார் என்பது ஒன்றும், சிதம்பர ரகசியம்
இல்லை...பதவி, பணம், புகழ் என்ற இவற்றிற்காக, தன் கட்சியின்
கொள்கைகளை, கூட்டணித் தலைமை கட்சியின் காலடியில் அர்ப்பணித்து, அந்தக்
கட்சியின் துதிபாடிகள் வரிசையில் ஐக்கியமாகியுள்ளார் இந்த மெத்தப்
படித்தவர். காங்கிரஸ்காரர்கள் ஊன்றுகோலாகப் பயன்படுத்தி வந்த
செங்கோலை, சமன் செய்து சீர்துாக்கும் கோல் இதுவென அடையாளம் காட்டியவர்,
அதிகம் படிக்காத நரேந்திர தாமோதரதாஸ் மோடி. ஆனால், தமிழக
மன்னர்களை உச்சத்தில் நிறுத்திய சீர்மிகு செங்கோலைப் பற்றி, இலக்கிய
அறிவாளர் சு.வெங்கடேசன் அறியாமல், இழிவாகப் பேசி இருக்கிறார்.கண்ணகிக்கு
இழைத்த அநீதிக்காக, மன்னன் உயிரையே பறித்தது இந்த செங்கோல். ஆணும்
பெண்ணும் சமம் என்று உலகுக்கு எடுத்துரைத்தது அன்னை மீனாள் கை செங்கோல்.
'கோணாத கோல்' வேண்டும் என, அபிராமி பட்டர், அபிராமியிடம் வைத்தார்
வேண்டுகோள். அரச பதவி கொடுத்த துரியோதனின் தீச்செயலுக்கு துணைநின்ற
கர்ணன் போல, தனக்கு எம்.பி., பதவி கொடுத்து உதவிய கருணாநிதி
குடும்பத்தார்க்கு, தன் அறிவை காணிக்கையாக்கியுள்ளார் வெங்கடேசன்.மோடியை
அவமானப்படுத்துவதாக நினைத்து, தென்னக ராஜாங்கத்தின் குறியீடான
செங்கோலையும், சம்பந்தமில்லாத பெண்களையும் இழிவுபடுத்திய வெங்கடேசனின்
மேதாவித்தனத்தை என்னென்று சொல்வது! படங்கள் மட்டும் போதும் விஜய்க்கு!
கே.ரங்கராஜன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரியாணி தட்டில்,
நண்டு செத்தது தெரியலை; மீன் செத்தது தெரியலை; கோழி செத்தது தெரியலை; ஆடு
செத்தது தெரியலை... தம்மாத்துண்டு ஈ செத்தது தான் பெரிசா தெரியுதா?' என்ற
வடிவேலுவின் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.கனியாமூர் பள்ளிக்
கலவரத்தில் சிறுமி செத்தது தெரியலை; வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம்
கலந்தது தெரியலை; மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ.,வை அடித்துக்
கொன்றது தெரியலை; கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் செத்தது
தெரியலை; கஞ்சா போதையில் இளைஞர்கள் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கெட்டு போனது
தெரியலை; சிறை கைதி மரணங்கள் தெரியலை...'எண் சாண் உடம்பிருக்க, கோமணத்துக்கு இடி விழுந்தா மாதிரி' நீட் பிரச்னையை பற்றி, பேசி இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் விஜய். தமிழ்நாடு தேர்வாணை யத்தில் குளறுபடி நடந்ததே... அது தேவை இல்லை என்று சொல்லி விடலாமா?அரசு
நடத்தும் எல்லா விதமான பரீட்சைகளிலும், சில சமயம் முறைகேடுகள் நடக்கும்;
அதனால் அந்த நடைமுறையே மோசமானது என்று, வளரும் இளைய தலைமுறையினரிடம், நஞ்சை
விதைத்து விட்டீர்களே?நீட் இல்லை என்றால், ஏழை எளிய மாணவ - மாணவியர்க்கான மருத்துவப் படிப்பு, கனவாகவே முடிந்து விடும்; தெரியுமா விஜய் இது உங்களுக்கு?வேண்டாம், கிளம்புங்கள்; படத்தில் நடிப்பது மட்டும் போதும் உங்களுக்கு!