உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வைகோவின் பொறுமை ஆச்சரியமானது!

வைகோவின் பொறுமை ஆச்சரியமானது!

என்.வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'செத்தாலும் சொந்த சின்னமான பம்பரத்தில் தான் போட்டியிடுவேன்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் துரை வைகோ சொன்னதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு கோபம் தலை உச்சிக்கு சென்றது.உடனே வைகோவைத் தொடர்பு கொண்டு, 'உங்கள் மகனுக்கு, எதை, எங்கே, எப்படி பேச வேண்டும் என்ற பக்குவம் கொஞ்சமும் இல்லை. ம.தி.மு.க., வை கூட்டணியில் சேர்ப்பதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.'அதையும் மீறித்தான், நீங்கள் கேட்டுக் கொண்டபடி திருச்சி தொகுதியைக் கொடுத்தேன்' என, காய்ச்சி எடுத்திருக்கிறார் ஸ்டாலின்.கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் என, தாராளமாக வழங்கிய ஸ்டாலின், ம.தி.மு.க.,வுக்கு மட்டும், ஒரே ஒரு தொகுதியைக் கொடுத்ததை எந்த விதத்திலும் நியாயபடுத்த முடியாது.கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் அவர்களது சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்த ஸ்டாலின், ம.தி.மு.க., மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டது, துரைக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.கருணாநிதி காலத்திலேயே, வைகோ பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில், கருணாநிதியால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.அதை எல்லாம் மறந்து தான், வைகோ, தி.மு.க.,வுடன் இணைந்து பணியாற்ற முடிவு எடுத்தார்.அப்படிப்பட்டவரின் மகனுக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா?தனக்கும், தன் மகனுக்கும், இவ்வளவு அவமானம் நடந்த பிறகும் கூட, வைகோ பொறுமை காட்டுவது நமக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

விரும்பாதோருக்கு தேர்தல் பணி வேண்டாமே!

அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு முழுதும் தேர்தல் பணிகளில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில், ஆசிரியர்களேஅதிகமாக தேர்தல் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.உடல் ரீதியாக, மனரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி இருக்கும் பெண் ஆசிரியர்கள், தங்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கோருகின்றனர்.மேலும், இதயநோய், கைக்குழந்தைகளுடன் உள்ள பெண் ஆசிரியர்கள், சர்க்கரை நோய், நுரையீரல் போன்ற நீண்டகால நோய்களுக்கு தொடர் சிகிச்சை பெறுபவர்கள் கூட, தேர்தல் பணிகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு, மருத்துவ சான்றுகளுடன் கோரிக்கை வைக்கின்றனர்.ஆனால், இந்த கோரிக்கைகள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன.தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், 17 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் பணிகளுக்கு, குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே தேவைப்படுகின்றனர். எனவே, முழு மனதோடு தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும், அப்பணி வழங்குவது நல்லது. ஓட்டுச் சாவடிகளில் மிரட்டல் போன்ற பிரச்னைகளை சமாளிக்க பயந்து சிலர், இப்பணியை வேண்டாம் என்று தவிர்ப்பர். அத்தகைய பயத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. 

மதச்சார்பு அற்று இருக்கிறோமா நாம்?

ராமகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் வங்கதேசத்தில், மத ரீதியாக துன்புறும் சிறுபான்மையினர், நம் நாட்டில் அடைக்கலமாக வந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் குடியுரிமை வழங்க உதவி செய்கிறது சி.ஏ.ஏ., சட்டம்.இந்த மூன்று நாடுகளுமே ஒரு காலத்தில் நம் நாட்டுடன் இணைந்து தான் இருந்தன. நாடுகள் பிரிந்த பின், இஸ்லாம் மதத்தினர் இந்த மூன்று நாடுகளிலும் பெரும்பான்மையினராகி விட்டபடியால், மாற்று மதத்தினருக்கு புகலிடம் கொடுக்கவே, சி.ஏ.ஏ., சட்டம் அமலுக்கு வந்தது.ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... இந்த மூன்று நாடுகளும் மீண்டும் நம் நாட்டுடன் இணைந்தால், அவை தற்போது நமக்கு விளைவிக்கும் ஊறுகள் தவிர்க்கப்படும்.அதே சமயம், ஆண்டாண்டு காலமாக அந்த நாடுகளில் வளர்ந்து செழித்துள்ள பயங்கரவாதிகளை, நம் நாட்டு பிரஜைகளாக்கி விட்டால், நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.நம் நாட்டை இன்னும், ஹிந்து நாடாக பிரகடனப்படுத்திக் கொள்ள, நம்மால் இயலவில்லை. அப்படியே பிரகடனப்படுத்தினாலும், வரக் கூடிய பொது சிவில் சட்டம் நம்மை, மதச்சார்பற்ற நாடாகவே திகழ வைக்கும்.அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், தங்களை கிறிஸ்துவ நாடுகளாகவே பிரகடனப்படுத்தி உள்ளன. நம் நாட்டில், பொது சிவில் சட்டம் இல்லாத தற்போதைய நிலையில், குறிப்பிட்ட சில சட்டங்கள்,ஹிந்துகளுக்கு ஒன்றாகவும்,இஸ்லாமியருக்கு வேறாகவும் உள்ளதால், மத சார்பற்ற நாடாக நம்மைச் சொல்லிக் கொண்டாலும், அப்படி திகழ முடிவதில்லை என்பதே உண்மை.எனவே, எதற்கு இந்த மாறுபாடு? பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி, அனைவரும் ஒன்றே என்று வாழ்வோமே!

ஜனநாயக நாடுன்னு சொல்லி குட்டையை குழப்பாதீங்க!

வி.சங்கரராம ஐயர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரண்டு வயது பெண் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை, இப்போது காமக் கொடூர தாக்குதல்களுக்கு ஆளாகாதவர்கள் இல்லை என்று சொல்ல வேண்டிய நிலை, நம் தமிழ்நாட்டில் உருவாகி விட்டது.'பக்கத்து கடைக்கு போயிட்டு வரேன். என் பொண்ணைக் கொஞ்சம் பார்த்துக்குங்க' என்று சொல்லி, நிம்மதியாய் சென்று வந்த தமிழகத்தை இப்போது காணோம்.'போக்சோ, கீக்சோ' என ஏதேதோ சட்டம் போட்டு, தண்டனை கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால், குற்றம் குறைவதைக் காணோம்; வளர்ந்து கொண்டே இருக்கிறது.பண பலம் மிக்கவர்கள், சட்டத்தின் சிறிய ஓட்டை வழியே வெளியேறி, தைரியமாக, சுதந்திரமாக உலவுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் எதிர்காலமும், அதன் பெற்றோரும் தான் கவலைக்கிடமாகி நிற்கின்றனர். இழந்த மானத்தையும், கவுரவத்தையும் அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகையில் திரும்பப் பெற முடியுமா?இவ்விஷயத்தில், ஜனநாயகம், அது இது என குட்டையைக் குழப்பாமல், பலாத்காரம் செய்யும் கேடு கெட்ட ஜென்மங்களுக்கு, 'ஆண்மை நீக்கம்' செய்து, மரண அடி கொடுத்தால் தான், நம் தமிழகம் திருந்தும்; நாட்டின் கவுரவம் காப்பாற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 30, 2024 04:21

Arasiyal nirvaakam, vanikam enru ellaaththuraikalilum inthap ‘pen kodumai’ kodikattip parakkirathe Appadi ‘aanmai neekkam’ seyyum sattam vanthaal, adimuthal mudivarai viral vittu ennumalavu thaan meethi iruppaarkal


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை